Tiruvannamalai: ’ஒரு நைட்டுக்கு 40 ஆயிரமா? திருவண்ணாமலையில் தாறுமாறாக உயர்ந்த விடுதி கட்டணம்! ’
“திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 17ஆம் அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது”
திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவையொட்டி வரும் நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் விடுதி கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 17ஆம் அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மாலை என இரண்டு வேலைகளிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் நவம்பர் 26ஆம் தேதி அன்று அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
இந்த ஆண்டு நடைபெறும் தீபத் திருவிழாவில் சுமார் 40 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார் என என எதிர்ப்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் வரும் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தங்கும் விடுதிகளின் அறைகளின் கட்டணம் வசதிகளுக்கு ஏற்ப 40 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வெளியூர் பக்தர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக சாதாரண நாட்களில் ஆயிரம் ரூபாய் முதல் மூன்றாயிரம் ரூபாய் வரை விடுதி கட்டணங்களை வசூலிப்பது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 10 முதல் 15 மடங்கு வரை விடுதி கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் 80 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதாக விடுதிகள் மீது பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் விடுதி உரிமையாளர்களிடம் கேட்கும்போது, வருடத்திற்கு ஒரு முறை வரும் திருவிழா என்பதால் கட்டண உயர்வை நாங்கள் செய்துதான் ஆக வேண்டும். எவ்வுளவு கட்டணம் உயர்த்தினாலும் அதை செலுத்த மக்கள் தயாராக உள்ளதாக என கூறுகின்றனர்.
கட்டண உயர்வு தொடர்பான விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விடுதி கட்டண விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
டாபிக்ஸ்