Diwali History: தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என்றால்; எதுதான் தமிழர் பண்டிகை? உண்மை இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Diwali History: தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என்றால்; எதுதான் தமிழர் பண்டிகை? உண்மை இதோ!

Diwali History: தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என்றால்; எதுதான் தமிழர் பண்டிகை? உண்மை இதோ!

Kathiravan V HT Tamil
Nov 12, 2023 06:10 AM IST

“ஆனால் தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது குறித்த சான்றுகள் தமிழ்நாடு வரலாற்றில் கடந்த 19ஆம் நூற்றாண்டு வரை இல்லை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருதுகோளாக உள்ளது.”

தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை

வட இந்தியாவில் தீபாவளி

14 ஆண்டுகால வனவாசம் முடிந்து ராம பிரான் தனது மனைவி சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோரோடு அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் தீபங்கள் ஏற்றி கொண்டாடினர். அதுவே தீபாவளியாக வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியாவில் தீபாவளி

ஆனால் தென்னிந்தியாவை பொறுத்தவரை தீபாவளி பண்டிகையின் தோற்றம் குறித்த கதையானது கிருஷ்ணருடன் தொடர்பு படுத்தப்படுகிறது.

நரகாசூரன் எனும் அரக்கனை கிருஷ்ணர் வதம் செய்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தலையில் எண்ணெய் தேய்த்து குளித்து குளிக்க வேண்டும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

சமணர்களின் தீபாவளி

சமணர்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை தோற்றம் குறித்த கதை வேறு விதமாக உள்ளது. சமணமதத்தின் கடைசி தீர்த்தங்காரரான வர்த்தமான மகாவீரர் மக்களுக்கு பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இந்த பிரசங்கம் இரவு முழுவதும் நீண்டு விடியற்காலை வரை தொடர்ந்தது, மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் இரவில் அங்கேயே உறங்கிவிட்டனர். மகாவீரரும் தனது இருக்கையிலேயே வீடுபேரு அடைந்திருந்தார்.

இதனை அறிந்த மக்கள் ஞான ஒளியை கொடுத்த மகாவீரரை நினைவுகூறும் வண்ணம் வீடுகளில் தீபங்களை ஏற்றினர். இதுவே பின்னாட்களில் தீபாவளியாக மாறியது என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தீபாவளி

ஆனால் தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது குறித்த சான்றுகள் தமிழ்நாடு வரலாற்றில் கடந்த 19ஆம் நூற்றாண்டு வரை இல்லை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருதுகோளாக உள்ளது.

தைப்பொங்கல் என்பது தமிழர்களின் மரபுவழி பொருளாதாரம் சார்ந்து கட்டமைக்கப்பட்ட திருவிழாவாக கொண்டாடப்படும் நிலையில் தீபாவளி என்பது நவீனபொருளாதாரம் சார்ந்து கொண்டாடப்படும் நிகழ்வாக மாறி உள்ளது.

தொ.பரமசிவன் சொல்வது என்ன?

பொங்கல் என்பது தமிழரின் திருவிழாவாகவும், தீபாவளி என்பது இந்துக்களின் திருவிழாவாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மானுடவியல் ஆய்வாளர் தொ.பரமசிவம் தமது அறியப்படாத தமிழகம் நூலில் கூறுகிறார்.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகலோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா, பார்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவது இல்லை. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடி மருந்து தமிழ்நாட்டிற்கு கடந்த 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை. விஜயநகர பேரசு தமிழ்நாட்டில் ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகே தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பது தொ.பரமசிவன் சொல்லும் கூற்றாக உள்ளது.

தமிழர்களின் விழாக்கள் எது?

தீபாவளி தமிழர் திருவிழா இல்லை எனில் தமிழர் திருவிழாக்கள் எது என எழும் கேள்விக்கும் தொ.ப பதில் அளித்துள்ளார்.

சைவம், வைணவம் இவையே தமிழர்களின் பழமையான மதமாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகை திருவிழா, திருவாதிரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு உள்ளிட்டவை சைவமும் வைணவமும் இங்கு பெருஞ்சமயங்களாக நிலை பெருவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாகளாக இருந்ததாக கூறுகிறார். பக்தி இயக்கங்களின் வளர்ச்சிக்கு பிறகு சைவ, வைணவ மதங்களாலும் இவை அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.