Happy Doctor's Day : மக்களை மருத்துவர்களும், மருத்துவர்களை அரசும் காக்க வேண்டும் என்பதே மருத்துவர் தின கோரிக்கை
Happy Doctor's Day : மக்கள் நோயில்லாமல் வாழ வழி செய்வதே மருத்துவரின் பிரதான கடமையாகும். எனவே அதை உணர்ந்து மருத்துவர்கள் நடந்துகொள்ள வேண்டும், அரசும் அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நோயாளிகள் தங்கள் சொந்த செலவிலிருந்து சுகாதாரத்திற்கு என்று செலவிடுவது 2017- 18ம் ஆண்டைவிட தற்போது கூடுதலாக செலவிடும் சூழல் உருவாகியுள்ளது.
2017-18ம் ஆண்டில் சொந்த செலவிலிருந்து, மாதத்திற்கு சுகாதாரத்திற்கு 10 சதவீதத்துக்கு மேல் செலவிடப்படும் குடும்பத்தினர் 3.3 சதவீதம் என இருந்தது. 25 சதவீதத்துக்கு மேல் செலவிடுவது 1.2 சதவீதம் குடும்பத்தினர் என இருந்தது. தற்போது, 2022 – 23ல் 10 சதவீதம் செலவிடுவது, 5.4 சதவீதம் எனவும், 25 சதவீதத்துக்கு மேல் செலவிடுவது 1.9 எனவும் அதிகரித்துள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாதிப்பு சற்றுக் குறைவாக இருந்தாலும், 2017-18, 2022-23 ஆண்டுகளில் தனிநபர் செலவு அதிகரித்திருப்பதை குறைக்க அரசுக்கு மருத்துவர்கள் துணை நிற்க வேண்டும். அரசும் இதை குறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மாத செலவில் ஒரு குடும்பம் 10 சதவீதத்துக்கு மேல் செலவு செய்வதை சுகாதாரப் பெருஞ்செலவு (Catastrophic expenditure) என அழைப்பர். அதை குறைக்க மருத்துவர்கள் மருத்துவர்கள் தினத்தில் உறுதியேற்க வேண்டும்.
தமிழகத்தில் தொற்றா நோய்களின் (சர்க்கரை, ரத்தக்கொதிப்பு) பாதிப்பு/இறப்பு பிற மாநிலங்களை விட அதிகம் என இருந்தும்,
சர்க்கரை நோயை ஏற்படுத்தும் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் விலைக் குறைவாகவும், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் (இவை சர்க்கரை நோய், இதய நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்) விலை அதிகமாகவும் இருப்பதை அரசு மற்றும் மருத்துவர்கள் கவனத்தில்கொண்டு, இந்த நிலை மாற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
2009ம் ஆண்டில் கலைஞர் முதல்வராகவும், மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகவும் இருந்தபோது மருத்துவர்களின் ஊதியத்தை அதிகரிக்க நிறைவேற்றப்பட்ட அரசாணை 354ஐ தாமதமின்றி தமிழக அரசு நிறைவேற்றி, மருத்துவர்களின் துயர்துடைக்க முன்வர வேண்டும்.
இதற்காக ஆண்டுக்கு கூடுதலாக ரூ.300 கோடி மட்டுமே தேவைப்படும். தமிழக நிதிநிலை அறிக்கையில், இது 0.1 சதவீதத்துக்கு குறைவே என்பதை அரசு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். கொரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தாமதமின்றி தமிழக அரசு வேலை வழக வேண்டும்.
பிற மருத்துவ பணியாளர்கள் (மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், பிற மருத்துவ ஊழியர்கள்) ஒப்பந்த பணிகளுக்குப் பதில் நிரந்தரமாக பணியமர்த்தப் படவேண்டும்.
மருத்துவர் தினத்தில் தமிழக அரசு மேற்சொன்னவற்றை கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க முன்வந்தால் சிறப்பாக இருக்கும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
டாபிக்ஸ்