Hosur:ஓசூரில் தொழில்வளர்ச்சி என்ற பெயரில், மக்களுக்கு புற்றுநோயை பரிசளிப்பதா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hosur:ஓசூரில் தொழில்வளர்ச்சி என்ற பெயரில், மக்களுக்கு புற்றுநோயை பரிசளிப்பதா?

Hosur:ஓசூரில் தொழில்வளர்ச்சி என்ற பெயரில், மக்களுக்கு புற்றுநோயை பரிசளிப்பதா?

Pandeeswari Gurusamy HT Tamil
May 27, 2023 06:43 PM IST

குடிநீரில் குரோமியத்தின் அளவு 0.1மி.கி./லிட்டர் என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும்.

 நிலத்தடி நீர் கோப்புப்படம்
நிலத்தடி நீர் கோப்புப்படம்

ஒரு ஆங்கில பத்திரிக்கையில் சமீபமாக,நேதாஜி நகர் மக்கள் தோல் ஒவ்வாமை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதற்கு காரணம் நிலத்தடி நீரில் ஏற்பட்டுள்ள மாசுபாடே காரணம் என்று மக்கள் சொன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது உண்மை என நிரூபணமாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, 2 அரசு குழாய் கிணறுகளிலும்,13 தனியார் குழாய் கிணறுகளிலும், மாதிரிகள் ஏப்ரல் 11 அன்று எடுக்கப்பட்டு கோயம்புத்தூரில் உள்ள பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆய்வுகளின் படி,நிலத்தடி நீரில் குரோமியத்தின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதால்,அதை குடிக்கவோ,பிற பயன்பாட்டிற்கோ பயன்படுத்த முடியாது என்பதை ஸ்னேகா உறுதிபடுத்தியுள்ளார்.

அதனால் அங்குள்ள மக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் அளிக்கும் திட்டம், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் 30 இலட்சம் செலவில்,2,200 மீட்டருக்கு குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியும் விரைவில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னேகா அவர்கள் ஆரம்ப கட்ட, எழுத்து வடிவிலான அதிகாரப்பூர்வ பரிசோதனை முடிவுகளை அங்குள்ள மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னரே,அந்த நிலத்தடி நீரில் ஏற்பட்ட குரோமிய பாதிப்பிற்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்துள்ளார். (பொதுவாக, மின்முலாம் தொழிற்சாலைகள்,தோல் பதனிடும் தொழிற்சாலைகள், ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் அதிகப்படியாக குரோமியம் நிலத்தடிநீரில் கலப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.)

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் இதுகுறித்து ஓசூர் நிர்வாகம் தங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என ஆதங்கப்படுகின்றனர். பல குடும்பங்களில் உள்ள பெரியவர்களால் லாரிக்கு சென்று குடிநீர் சேகரிக்க முடியாத சூழலில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 நிமிடம் ஒதுக்கி, நேரடியாக வீட்டில் குடிநீர் கொடுக்க ஏற்பாடு செய்வது சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

குடிநீரில் குரோமியத்தின் அளவு 0.1மி.கி./லிட்டர் என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும்.

அதை தாண்டினால், தோல் ஒவ்வாமைநோய்கள், வாய் புண்கள், குடலில் புண்கள், ஈரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நாள்பட்ட நிலையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆக, அரசும்,மாசு கட்டுப்பாட்டு வாரியமும், விரைந்து செயல்பட்டு, காரணங்களை கண்டறிந்தும், அதை நீக்கும் திட்டங்களிலும் (ரிவெர்ஸ் ஆஸ்மோசிஸ் பில்டர்ஸ்)தடுக்கும் திட்டங்களையும் நடைமுறைபடுத்தி, வளர்ச்சி என்ற பெயரால்,மக்களுக்கு புற்றுநோய் மற்றும் பிற பாதிப்புகள் ஏற்படா வண்ணம் தடுக்கும் செயல்பாடுகளில், தாமதமின்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதற்கு அரசு இதற்கு செவிசாய்க்குமா என மருத்துவர் வீ.புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.