IAS: ’தலீத் என்பதால் டார்கெட் செய்யப்பட்டேன்’ ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகாருக்கு ககன் தீப் சிங் பேடி விளக்கம்!
”ஒருபோது நான் சாதியரீதியாக பிரித்து வைத்தது கிடையாது. இது என்னுடன் பழகிய அனைவருக்கும் தெரியும்” மணீஷ் ஐஏஎஸ் புகாருக்கு ககன் தீப் சிங் பேடி பதில்
ஈரோடு கூடுதல் ஆட்சியராக உள்ள மணீஷ் ஐஏஎஸ், தான் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் துணை ஆணையராக பணியாற்றியபோது, அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன் தீப் சிங் பேடி சாதிய ரீதியிலான வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கடந்த ஜூன் 2ஆம் தெதி தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ.இறையன்புவுக்கு எழுதிய கடிதத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “நான் மருத்துவர் மனிஷ் நார்னாவாரே. தற்போது ஈரோடு கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருகிறேன். இந்த கடிதம், சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறையின் துணை ஆணையராக நான் இருந்த 14.06.2021 முதல் 13.06.2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களை பற்றியது. நான் ககன் தீப் சிங் பேடி அவர்களுக்கு கீழ் பணியாற்றியபோது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
என் பணி காலத்தில், பேடி அவர்களால் மிக மோசமான பல தொல்லைகளுக்கு உள்ளானேன். நான் எஸ்.சி.பிரிவை சேர்ந்த நபர் என்பதை பேடி அவர்கள் அறிந்து வைத்து, அதன் பேரிலேயே வேண்டுமென்றே இவற்றை செய்தார். கோமல் கௌதம் என்ற செய்தியாளர் பதிவிட்ட தவறான செய்தி குறித்து நான் ட்வீட் செய்திருந்தேன். அதை டெலிட் செய்யும்படி என்னை வற்புறுத்தினார். முதலில் மறுத்தாலும், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களால் நான் அதை டெலிட் செய்தேன்.
கோமல் கௌதம் என்ற அந்த செய்தியாளரின் ‘சுடுகாட்டில் தவறான பல வேலைகள் நடக்கின்றன’ என்ற தவறான குற்றச்சாட்டை சொல்லி இரவு 8.30 மணிக்கு சுடுகாடு மூடப்பட்டிருக்கும் என்பதை தெரிந்து என்னை ஆய்வுக்கு அனுப்பினார். அதற்கு முன்னர் நாங்கள் இருவரும் தேசிய சஃபாய் கர்மாச்சாஅரி ஆணைய சேர்மனை சந்தித்துவிட்டு திரும்பி இருந்தோம்.
எஸ்.இ.வீரப்பன் என்பவரை பணியிட மாற்றம் செய்து, என்னுடைய திடக்கழிவு மேலாண்மை குழுவை மிகவும் பலவீனமாக்கினார்.
சமூகநல அலுவலர் மற்றும் தலமைமை மருத்துவ அதிகாரிக்கு இடையே சண்டை உருவாக்கி, எனது சுகாதாரத்துறை குழுவையும் பலவீனமாக்கினார். இது ஒட்டுமொத்த சுகாதாரத்துறை பணியையும் தொய்வடைய செய்தது.
ஒவ்வொரு ஆய்வுக்கூட்டத்தின் போதும் 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முன்னிலஒஇயில் தேவையில்லாத விஷயங்களுக்காக என்னை திட்டுவார். மீட்டிங் ஹாலில் ஏன் கொசுக்கள் உள்ளது; என்ன செய்கிறார்கள் அதிகாரிகள் என்று கூறிவிட்டு சிரிப்பது போன்ற சம்பவங்களும் நடைபெற்று உள்ளது.
எனக்கும் அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கும் இடையே மோதலை உருவாக முயன்றார்.
இந்தூர் மாநகராட்சியில் நடந்த அலுவல் ரீதியிலான பணியின்போது. என் சாதியையும் நம்பிக்கையும் குறிப்பிட்டு ‘நீ ஏன் உஜ்ஜெயினி கோயிலுக்கு செல்கிறாய் என்று கேட்டார்.’
தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவங்களும் அதில் ஏற்பட்ட அவமானங்களும் என்னை உடையச்செய்துவிட்டது. இதனால் நான் பலமுறை மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதுள்ளேன். தற்கொலை எண்ணம் கூட வந்தது என தெரிவித்துள்ளார்.
ககன் தீப் சிங் பேடி விளக்கம்
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் தற்போது சுகாதாரத்துறை செயலாளராக உள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள் அவர், ”மணீஷ் மிகவும் நல்ல அதிகாரி, சுறுசுறுப்பாக செயல்படக்கூடிஅய்வர்; அவர் அனுப்பிய கடிதத்தை படித்தேன், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இரண்டு மாதம் முன் கூட என்னிடம் இயல்பாக பேசினார். கோவிட் சமயத்தில் எனக்கு கீழ் இருந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தனித்தனியே வேலையை பிரித்து கொடுத்தேன்.
அனைவரும் இணைந்து மக்களுக்காக பணியாற்றினோம். எந்தவொரு உள்நோக்கத்தோடும் நான் இதுவரை யாரையும் நடத்தியதில்லை. என்னுடைய பணி அனுபவத்தில் இது போன்ற புகார்கள் யாரும் என் மீது கொடுத்தது இல்லை. எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நான் இதுவரை பணிபுரிந்த இடங்களில் சாதி ரீதியாக யாரையும் நடத்தியது கிடையாது. மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த சாதி சண்டைகள் பலவற்றை நான் தீர்த்துவைத்துள்ளேன். ஒருபோது நான் சாதியரீதியாக பிரித்து வைத்தது கிடையாது. இது என்னுடன் பழகிய அனைவருக்கும் தெரியும்” என்று கூறி உள்ளார்.
டாபிக்ஸ்