Trichy: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி.. புத்தாண்டில் நோ்ந்த துயரம்!
திருச்சி அருகே வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினா். ஆட்டோ ஓட்டுநா் மாரிமுத்து என்பவா் வீட்டின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழுந்தது.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலம் ரயில் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). இவரது தாய் சாந்தி (60), மனைவி விஜயலட்சுமி (45), இவர்களது மகள்கள் ஹரிணி (12), பிரதீபா (11). குழந்தைகள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். ஆட்டோ ஓட்டுநரான மாரிமுத்து உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் மனைவி விஜயலட்சுமி, தாய் சாந்தி மற்றும் இரண்டு மகள்கள் மட்டுமே இருந்துள்ளனர். நேற்று வழக்கம்போல் இரவு தூங்கச் சென்றனர். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் குழந்தைகள் உட்பட நான்கு பேரும் கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த அரியமங்கலம் போலீஸார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் வீட்டில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்