ஆட்டம் காட்டிய குரங்குகள்: 3 மணி நேர பாச போராட்டத்துக்கு பிறகு பவ்வியம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 4 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாறு ஆற்று கரையோரம் உள்ள 13 வது வார்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 3 குரங்குகள் சுற்றி திரிந்தது. அதன் பின்பு இனப்பெருக்கம் காரணமாக குரங்குகள் எண்ணிக்கை 8 ஆக பெருகியது.
இந்த குரங்குகள் அவ்வப்போது அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து உணவு பொருட்கள், பழங்கள், மளிகை பொருட்கள், அரிசி மாவு போன்றவற்றை எடுத்துச் செல்வதும், பெரியவர்கள் முதல் சிறியவர்களை கடிப்பதும் விரட்டுவதுமாக இருந்தது. குரங்குகளின் தொல்லையால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.
மேலும், அப்பகுதி பொதுமக்கள் வீட்டின் கதவை கூட திறந்து வைக்க முடியாத சூழல் இருந்து வந்தது. இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு சரிவர உணவு கிடைக்காமல் 4 குரங்குகள் வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டது. மீதமுள்ள 4 குரங்குகள் மட்டும் 13-வது வார்டு பகுதி பொதுமக்களை கடந்த சில மாதங்களாக கடுமையாக அச்சுறுத்தி வந்தது.
இது தொடர்பாக விளாத்திகுளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கவின் அறிவுறுத்தலின் பேரில் வனக்காவலர்கள் கடந்த ஒரு வாரமாக கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடிக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதலில் ஒரு சிறிய குரங்கும் பெரிய ஆண் குரங்கும் பிடிபட்டது. மீதமுள்ள ஒரு கர்ப்பமான பெண் குரங்கு மற்றும் குட்டி குரங்கை நேற்று முன்தினம் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனா்.
பாசப்போராட்டம்
வனத்துறையினர் வைத்த கூண்டில் முதலில் குட்டி குரங்கு பிடிபட்டது. அதனை மீட்பதற்காக கர்ப்பமாக இருந்த தாய் குரங்கு கூண்டின் மேலே அமர்ந்து கொண்டு சுமார் 3 மணி நேரமாக வனத்துறையினரை அருகில் நெருங்க விடாமல் கத்தியது. வனத்துறையினரும் தாய் குரங்கை விரட்டாமல் காத்திருந்தனர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் தாய் குரங்கை கூண்டிற்குள்ளே செல்ல வைத்து பிடித்தனர். என்னதான் குரங்குகள் தொல்லை கொடுத்திருந்தாலும் இந்த பாசப்போராட்டத்தை கண்டு அப்பகுதியினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
டாபிக்ஸ்