T. V. Sundram Iyengar: இந்திய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் அடையாளமாக திகழ்ந்த தமிழர்
கால்நடையாக பயணப்பட்டு வந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வு கொடுத்து பேருந்துகளின் அவர்களை பயணிக்க வைத்த பெருமை டி.வி. சுந்தரம் ஐயங்காரையே சேரும். இந்திய தொழில் துறை, குறிப்பாக ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான திகழ்ந்த டி.வி.சுந்தரம் ஐயங்காரின் 68வது நினைவுநாள் இன்று.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்த இவர் திருச்சூரில் பள்ளிப்படிப்பும், திருநெல்வேலி இந்து கல்லூரி, கோவை போதனா பயிற்சி கல்லூரிகளில் மேற்படிப்பும் படித்தார்.
சொந்தமாக தொழில் தொடங்கும் ஆர்வத்துடன் இருந்த இவர், பெற்றோரின் விருப்பத்துக்கு ஏற்ப சட்ட படிப்பு பயின்றார். ஆரம்பத்தில் வழக்கறிஞர், ரயில்வே குமாஸ்தா, வங்கி ஊழியர் என வேலை செய்த இவர், தனது தந்தை மறைவுக்கு பின், தொழில் துறையில் இறங்கினார்.
இவரது முதல் தொழிலாக மர வியாபாரம் தேக்கு மரங்களை இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுப்ட்ட டி.வி. சுந்தரம் ஐயங்காருக்கு தொலைநோக்கு பார்வை சற்று அதிகமாகவே இருந்தது.
இவர் வாழ்ந்த காலகட்டத்தில் வாகனங்களில் செல்பதை மிகப் பெரிய கெளரவாக பார்க்கப்பட்ட நிலையில், மதுரையில் முதன்முதலாக கிராமப்புற பேருந்து சேவை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதன் விளைவாக 1911இல் டி.வி. சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை தொடங்கி தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழித்தடத்தில் 1912இல் பேருந்து சேவை தொடங்கினார். இதன்மூலம் தென் இந்தியாவில் சாலை போக்குவரத்துக்கு அடித்தளம் அமைத்தார்.
தூரத்துக்கு ஏற்ப கட்டணம், பயணிகள் தரும் காசுக்கு ரசீது போன்ற நடைமுறைகளை கொண்டுவந்து, பேருந்துகளை முறையாக அட்டவணைப்படி இயக்கும் நடைமுறையை நாட்டிலேயே இவர்தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார்.
இரண்டாம் உலகப் போரின்போது, சென்னை மாகாணத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட டிவிஎஸ் எரிவாயு ஆலை தொடங்கினார்.
டி.வி. சுந்தரம் ஐயங்காருக்கு பிறந்த 5 மகன்களும் தந்தைக்கு உதவியாக தொழிலில் இறங்கினர். வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார் தொழிலாளர்கள். குறிப்பாக அலுவலகத்தில் உணவு சாப்பிடுவதற்கான கேன்டீன் முறையை அறிமுகப்படுத்தியது இவர்தான்.
அதேபோல் ஊழியர்களுக்கான குடியிருப்புகள், அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்பட அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார். தாத்தா, அப்பா, பேரன், கொள்ளுப்பேரன் என 4 தலைமுறையாக தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் குடும்பங்கள் இருக்கிறார்கள்.
இந்திய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் அடையாளமாக திகழும் டிவிஎஸ் குழுமம் ரப்பர் புதுப்பிப்பு ஆலை, தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் மோட்டார் லிமிடெட், வீல்ஸ் இந்தியா, ப்ரேக்ஸ் இந்தியா, டிவிஎஸ் இன்ஃபோடெக், சுந்தரம் ஃபைனான்ஸ் என ஏராளமான நிறுவனங்கள் தொடங்கிபட்ட அவை வெற்றிகரமாக இயங்கியும் வருகின்றன,
எப்படி கால்நடையாக இருந்த மக்களின் வாழ்கையை பேருந்து பயணத்தின் மூலம் டி.வி.சுந்தரம் ஐயங்காரின், டிவிஎஸ் பேருந்துகள் உயர்த்தியதோ, 1980களில் டிவிஎஸ் 50 என்ற மோட்டர் வாகனத்தை அறிமுகம் செய்து மக்கள் சைக்களில் பயணித்த மக்கள் மோட்டர் வாகனங்களை இயக்குவதற்கான ஆணிவேராக இருந்துள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் டிவிஎஸ் அறிமுகப்படுத்திய வாகனங்கள், அந்த காலகட்டத்தில் மக்களிடையே புது வித பாய்ச்சலை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதற்கு உதாரணமாக டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்த டிவிஎஸ் ஸ்கூட்டி பெப், டிவிஸ் விக்டர் போன்ற வாகனங்கள் அநேக மக்களின் சாய்ஸாக இருந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் குழுமத்தை தொடங்கியவரும், முன்னணி தொழிலதிபராக விளங்கியவருமான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 78வது வயதில் ஏப்ரல் 28, 1955இல் மறைந்தார். இன்று அவரது 68வது நினைவு நாளாகும்.