Arcot Veerasamy Hospitalized: கீழே விழுந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் அமைச்சர், திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரான ஆற்காடு வீராசாமி முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார். 92 வயதாகும் அவர் தனது வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று இரவு திடீரென வழுக்கி கீழே விழுந்துள்ளார்.
இதில் அவரது தோள்பட்டை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை வீட்டில் இருந்தவர்கள் தூக்கி அமரவைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஆற்காடு வீராசாமிக்கு தோள்பட்டை வலி அதிகமாக இருந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து ஆற்காடு வீராசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் பொருளாளராகவும், மின்சாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆற்காடு வீராசாமி. தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது கடுமையான மின் வெட்டு பிரச்னை ஏற்பட்டது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. அத்துடன் பொதுமக்களின் அதிருப்தியையும் அவர் சந்திக்க நேர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளாக அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்து வரும் நிலையில், உடல் நல பாதிப்படைந்திருப்பதால் வீட்டிலேயே மருத்துவமனை போல் பெட் அமைத்து ஓய்வில் இருந்து வந்துள்ளார். அவரை திமுகவின் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் சந்தித்து வந்தனர்.
சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்காடு வீராசாமியை சந்தித்து நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து அவர் வழுக்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராசாமி தற்போது வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்