தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Erode Mp Ganesamoorthy Mdmk Mp Ganesamoorthy Who Tried To Commit Suicide, Died Today Without Treatment

Erode MP Ganesamoorthy: தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்.பி கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று மரணம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 28, 2024 06:23 AM IST

Erode MP Ganesamoorthy: ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஞாயிறன்று (மார்ச் 24) காலை திடீரென தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார்.

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேச மூர்த்தி வெற்றி பெற்று இருந்தார். ஐந்தாண்டுகள் எம்.பியாக இருந்த கணேச மூர்த்திக்கு இந்த தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை சீட் வழங்கவில்லை.

ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஞாயிறன்று (மார்ச் 24) காலை திடீரென தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டார். பின்னர் சுயநினைவை அவர் இழந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் மதிமுக பிரமுகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வைகோ வருத்தம்

முன்னதாக மருத்துவமனையியில் அனுமதிக்கப்பட்ட கணேச மூர்த்தியை பார்த்தவிட்டு திரும்பிய வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது, 

"கணேசமூர்த்தி அறிஞர் அண்ணாவை நேரில் பலமுறை சந்தித்தவர். சட்டமன்ற உறுப்பினர் ஆகி மக்களின் அன்பையும் பெற்றார். நாடாளுமன்றத்தில் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இம்முறை கட்சியில் அனைவரும் சேர்ந்து துரை வைகோவை அனுப்ப வேண்டும் கணேசமூர்த்திக்கு அடுத்த வாய்ப்பு பார்ப்போம் என்று கூறினார்கள். 

அதற்கு நான் ஏற்றுக் கொள்ளவில்லை பிறகு ஓட்டெடுப்பு எல்லாம் நடத்தப்பட்டது 99 சதவிகிதம் அவரை நிறுத்த வேண்டும் என்றார்கள். இரண்டு சீட்டுகள் வாங்குங்கள் ஒன்றை கணேசமூர்த்திக்கும் ஒன்றை துரை வைகோவுக்கு கொடுப்போம் என்று கூறினார்கள். அது போன்று செய்யலாம் என்று கூறினேன் அதன் பிறகும் வாய்ப்பில்லாமல் போனால் ஒரு வருடத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் அவரை எம்எல்ஏ வாக நிற்க வைக்கலாம் என்று எண்ணினேன். 

இல்லையெனில் அதை விட பெரிய பதவியை ஸ்டாலினிடம் கேட்டு அவருக்கு வாங்கி தரலாம் என்று பார்ப்போம் என்று நினைத்தேன். சட்டமன்ற தேர்தல் வரும்பொழுது அவருக்கு உண்டான காயம் ஆறிவிடும். அவர் தென்னை மரத்திற்கு போடுகின்ற நஞ்சினை கலந்து குடித்திருக்கிறார். பிறகு அங்கு வந்த கபிலனிடம் இதைக் கூறி நான் போயிட்டு வருகிறேன் என்று சொன்னாராம், அதனை தொடர்ந்து உடனடியாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரத்த அழுத்தம் குறைகிறது அதனால் சடேஷனில் வைத்துள்ளார்கள். அனைவரும் நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்." என்றார். இந்நிலையில் இன்று காலை கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கட்சி மீது வருத்தமா?

திமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த கணேச மூர்த்தி வைகோ தனியாக பிரிந்த போது அவருடன் சென்றார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று எம்பியாக இருந்தார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சீட் தரப்படும் என கணேச மூர்த்தி இருந்த நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து கட்சித் தலைமை முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிறன்று காலை வீட்டில் இருக்கும் போது மாத்திரகளை சாப்பிட்டு மயக்கம் அடைந்து சுயநினைவை இழந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்