EPS: “எண்ண முடியாத அளவுக்கு வரிகளை சுமத்தி சர்வாதிகார ஆட்சி” - மின் கட்டண உயர்வுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: “எண்ண முடியாத அளவுக்கு வரிகளை சுமத்தி சர்வாதிகார ஆட்சி” - மின் கட்டண உயர்வுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

EPS: “எண்ண முடியாத அளவுக்கு வரிகளை சுமத்தி சர்வாதிகார ஆட்சி” - மின் கட்டண உயர்வுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

Karthikeyan S HT Tamil
Jul 16, 2024 12:40 PM IST

EPS: கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர் என்று மின் கட்டண உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

EPS: “எண்ண முடியாத அளவுக்கு வரிகளை சுமத்தி சர்வாதிகார ஆட்சி” - மின் கட்டண உயர்வுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!
EPS: “எண்ண முடியாத அளவுக்கு வரிகளை சுமத்தி சர்வாதிகார ஆட்சி” - மின் கட்டண உயர்வுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்றே ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியாக நடந்து வருகின்றது. வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணிவிடலாம், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும், கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக மக்கள் கடுமையான மின்வெட்டாலோ, மின் கட்டண உயர்வாலோ பாதிக்கப்படுவது வாடிக்கை. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மின் பற்றாக்குறையாக இருந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதை அனைவரும் நன்கறிவார்கள்.

தமிழக மக்களின் சுமையைக் குறைக்க 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கியது ஜெயலலிதாவின் அரசு. இதன் பலனைக்கூட ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனுபவிக்கக்கூடாது என்ற தீய எண்ணத்துடன் ஆண்டுதோறும் இந்த திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி வருவது எவராலும் ஏற்க முடியாது.

  • திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.
  • பிப்ரவரி 2022-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுக அரசு தமிழக மக்களுக்கு அளித்த பரிசு சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என்று பல வரி உயர்வுகள்.
  • குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வரை, அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் திமுக அரசு அளித்த பரிசு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு.
  • 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.
  • தொடர்ந்து 2023-ம் ஆண்டு செப்டம்பரில் இரண்டாம் முறையாக மின் கட்டண உயர்வு. இதன் காரணமாக விசைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு இணைப்பில் பொதுவான பயன்பாட்டாளர்கள் (வணிக கட்டணம் நிர்ணயம்) பாதிப்பு.
  • நாடாளுமன்றத் தேர்தலில் 39-க்கு 39 இடங்களைப் பெற்ற இருமாப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் முடிந்தவுடன், நேற்று முதல் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டு மூன்றாம் முறையாக 5 சதவீத மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார் திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர்.
  • விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், 2024, ஏப்ரல் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவைகளை வழங்காமலும் மக்களை துன்பத்திற்குள்ளாக்கிய இந்த ஏமாற்று மாடல் அரசு, மூன்றாம் முறையாக மின்கட்டண உயர்வு என்ற ஒரு பேரிடியை தமிழக மக்களின் தலையில் இறக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
  • ஜெயலலிதா ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ‘மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும், மின்சார கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்குது’ என்று வசனம் பேசியவாறு வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்ததை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.
  • ‘சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ என்று நாடக வசனம் பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி, சொல்லாததையும் செய்துவிட்டார்.
  • ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னதை இந்த கையாலாகாத அரசு நிறைவேற்றியதா? என்று அல்லலுறும் மக்கள் கேட்கிறார்கள்.
  • உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை.

மக்களுக்குத் தேவையில்லாமல் வரி மற்றும் கட்டணச் சுமையை ஏற்றும்போதெல்லாம் அதனை ஒப்பீடு செய்ய, தங்களுக்கு வசதியாக இதர மாநிலங்களையும் திமுக. அரசு துணைக்கு அழைத்துக்கொள்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, மற்ற மாநிலங்களை ஒப்பீடு செய்து வரிச் சுமையை தமிழக மக்கள் தலையில் கட்டுவதற்கல்ல. மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை, எனது தலைமையிலான ஆட்சியில் செய்ததுபோல் மாநில அரசே ஏற்றுக்கொண்டிருக்கலாம். எனவே, விலைவாசி உயர்வு, வரி உயர்வு போன்றவைகளால் மக்களின் கோபம் எரிமலையாக வெடிப்பதற்கு முன்பு, பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வையும், விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழில்கள், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்.

நம்மை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மமதையில் பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைக்கனத்தோடு செயல்படுவாரேயானால், கொதிப்படைந்துள்ள தமிழக மக்கள், திமுக ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.