Ekambareswarar Temple: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செயல் அதிகாரி பணியிட மாற்றம்
காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில் அலுவலகத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் பணியிட மாற்றம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செயல் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பட்டு நகரம் என வருணிக்கப்படும் காஞ்சிபுரத்தில் ஏராளமான கோயில் உள்ள உள்ளது . இதனால் காஞ்சிபுரம் கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பஞ்சஸ்தலங்களில் பிரித்வி ஸ்தலம் என அழைக்கப்படும் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பர நாதர் கோயில் விளங்குகிறது. சுமார் 3500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலுக்கு நாள்தோறும் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்கள் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த திருக்கோயில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கோயிலின் செயல் அதிகாரியாக வேத மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறை நாளான கடந்த 8ம் தேதி கோயில் அலுவலகத்தில் யாரும் இல்லாத போது அங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த பெண் ஊழியர் இதுகுறித்து புகார் அளிக்கவில்லை. ஆனால் செயல் அலுவலரின் பாலியல் சீண்டல் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி செயல் அலுவலர் மற்றும் கோயில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு அது குறித்த அறிக்கையை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து இன்று இந்து சமய அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன் வேத மூர்த்தியை திருச்செந்தூர் கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் வேத மூர்த்தி பணி இறக்கம் செய்யப்பட்டு அயற்பணி ஊழியராக அமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஏகாம்பரநாதர் திருக்கோயில் தொடர்பாக சிலை செய்வதில் மோசடி , தங்க மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.