Neomax: நியோமேக்ஸ் மோசடி.. புகார் தர அழைக்கும் காவல் துறை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Neomax: நியோமேக்ஸ் மோசடி.. புகார் தர அழைக்கும் காவல் துறை!

Neomax: நியோமேக்ஸ் மோசடி.. புகார் தர அழைக்கும் காவல் துறை!

Karthikeyan S HT Tamil
Jul 22, 2023 12:58 PM IST

நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கும் விதமாக மதுரையில் இன்று மனுக்கள் மேளா நடைபெறுகிறது.

நியோமேக்ஸ்
நியோமேக்ஸ்

கிட்டதட்ட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனங்களின் முகவர்கள் பேச்சை கேட்டு பணத்தை முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாக கூறி நியோ மேக்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது.

இது குறித்த புகாரின் பேரில், சென்ட்ரியோ குரூப் ஆப் கம்பெனி, நியோ மேக்ஸ் மற்றும் துணை நிறுவன இயக்குநர்களான மதுரையைச் சேர்ந்த கமலக் கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி முகவர்கள் மணிவண்ணன், செல்லம்மாள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ஏற்கனவே தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக்குடி இசக்கிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் முக்கியமானதொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவிப்பு வருமாறு: "நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக இன்று (22-7-2023) காலை 9 மணி முதல் மதுரை புது நத்தம் ரோட்டில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் ‘மனு மேளா’ நடைபெற்று வருகிறது. இந்த மனுமேளாவில், பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் வந்து எந்த பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டோம், தங்களது முகவர்கள், இயக்குநர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார்களை அளிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளும் காவல் துறையினர் செய்கிறார்கள்." என மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி குப்புச்சாமி தெரிவித்துள்ளார்.

நியோமேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், கமலக்கண்ணன் உள்ளிட்ட 6 பேர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.