Palani: நாசா 2024 காலண்டரில் இடம்பிடித்த பழனி பள்ளி மாணவிகள் ஓவியங்கள்
பழனியை சேர்ந்த பள்ளி மாணவிகள் வரைந்த ஓவியங்கள் அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா வெளியிட்டிருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான காலண்டரில் இடம்பிடித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் அருகே அமைந்திருக்கும் புஷ்பத்தூரில் ஸ்ரீ வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயிலும் 1ஆம் வகுப்பு மாணவி துகிலோவியா, 4ஆம் வகுப்பு மாணவி லாயஷினி, 7ஆம் வகுப்பு மாணவி தித்திகா ஆகியோர் வரைந்த ஓவியங்கள் அமெரிக்காவின் விண்வெளி மையம் நாசாவின் காலண்டரில் இடம்பிடித்துள்ளது. நாசாவின் 2024 காலண்டரில் பள்ளி மாணவிகள் வரைந்த சூரிய குடும்பம், ராக்கெட், விண்வெளி கிராஃப்ட், விண்வெளியில் வீரர் இருக்கும் புகைப்படங்கள் இடம்பிடித்துள்ளன.
நாசா சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் காலண்டரில் இருக்கும் 12 பக்கங்களிலும் இடம்பிடித்திருக்கும் படங்களை தேர்வு செய்வதற்கு தலைப்பு கொடுக்கப்பட்டு உலகளவில் போட்டிகள் நடத்தப்படும். இதையடுத்து போட்டியில் தேர்வாகும் படங்கள் காலண்டரில் பிரசுரமாகும்.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டு காலண்டரில் இடம்பெறும் படங்களுக்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 194 நாடுகளில் இருந்து 4 முதல் 12 வயதுக்கு உள்பட்ட லட்சக்கணக்கான மாணவி, மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இதில் மேற்கூறிய மாணவிகளின் மூன்று படங்கள் தேர்வாகியுள்ளன.
இந்த மாணவிகளின் ஓவியங்கள் காலண்டரின் அட்டைப்படத்தில் இடம்பிடித்துள்ளன. இந்த ஓவியங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்கள், இந்தியாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட உள்ளன.
நாசாவின் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவிகளின் ஓவியங்கள் தேர்வாகி இருப்பது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.
ஏற்கனவே தொடர்ச்சியாக நான்கு முறை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் நாசாவின் காலண்டரில் இடம்பிடித்திருக்கும் நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக வந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்