Chennai - Bodi Train: முதல் முறையாக சென்னையிலிருந்து போடிக்கு நேரடி ரயில்
சென்னை செண்ட்ரல் - மதுரை துரந்தோ விரைவு ரயிலை போடி வரை நீட்டிப்பு செய்யும் தெற்கு ரயில்வேயின் பரிந்துரைக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் சென்னை - போடி இடையே நேரடிய ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. 2010ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் மேற்கு எல்லை பகுதியில் அமைந்திருக்கும் போடிக்கு செல்வதற்கு நேரடி ரயில் சேவையானது இல்லாமல் இருந்து வந்தது. சென்னையிலிருந்து, மதுரை வரை எக்பிரஸ் ரயிலில் சென்று பின்னர் அங்கிருந்து பாசஞ்சர் ரயில் மூலமே செல்ல வேண்டி இருந்தது.
மதுரை - தேனி வரை மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்து வந்த நிலையில், 2011 முதல் இந்த இரு ரயில்நிலையங்களுக்கு இடையிலான 90 கிமீ தூரம் அகலப்பாதையாக மாற்றும் பணி நடைபெற தொடங்கியது. முதல் கட்டமாக மதுரை - தேனி இடையிலான 75 கிமீ தூரம் அகலப்பாதையாக மாற்றப்பட்ட நிலையில், அங்கு சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்டு, இரு நகரங்களுக்கு இடையே தற்போது பாசஞ்சர் ரயில் சேவையானது இயங்கி வருகிறது.
இதையடுத்து எஞ்சியுள்ள 15 கிமீ தூரமும் அகல பாதை அமைக்கும் பணிகள் நிறைவுற்ற நிலையில், போடி வரையிலான அகல பாதை அமைக்கும் பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து போடியிலிருந்து, சென்னைக்கு நேரடியாக சென்னைக்கு ரயில் சேவை அறிமுகப்படுத்த வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மதுரை வந்து சென்னைக்கு இணைப்பு ரயிலை பிடிக்கும் சிரமத்தை தவிர்க்க நேரடி ரயில் வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பொது மேலாளர், ரயில்வே வாரித்துக்கு இதுதொடர்பாக பரிந்துரைதார். தற்போது ரயில்வே நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சென்னை செண்டரலில் இருந்து மதுரைக்கு புறப்படும் துரந்தோ ரயிலை போடி வரை நீட்டிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
வரும் பிப்ரவரி 19 முதல் மேற்கூறிய ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை செண்டரலிருந்து வண்டி எண்: 20601, இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 7.10 மணிக்கு மதுரை வந்து சேரும். பின்னர் அங்கிருந்து 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, உசிலம்பட்டி 8.01, ஆண்டிப்பட்டி 8.21 தேனி 8.40 போடி 9.35 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்தும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை மதுரையிலிருந்தும் புறப்படும்.
அதேபோல், மாலையில் வண்டி எண்:20602, போடியில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, தேனி 8.52, ஆண்டிப்பட்டி 9.10, உசிலம்பட்டி 9.30, மதுரை 10.45 மணிக்க சென்றடையும். பின்னர் 10.50 மணிக்கு மதுரையிலிருந்து, சென்னை செண்ட்ரலுக்கு காலை 10.50 மணிக்கு புறப்படும்.
அதேபோல், காலை மற்றும் மாலையில், மதுரை - போடி இடையே தாம்பரம் - நாகர்கோவில் அந்தோத்யா விரைவு ரயிலுக்கு இணைப்பு ரயிலாக பாசஞ்சர் ரயில் ஒன்று இயக்கப்படுகிறது.
வண்டி எண்: 06701 மதுரையிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு போடியை சென்றடையும். மறுமார்க்கமாக வண்டி எண்: 06702 போடியிலிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு, 7.50 மணிக்கு மதுரையை சென்றடையும்.
இதேபோல் மதுரை - போடி அகலப்பாதையில் போடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக பெங்களூருவுக்கும், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.