Sathuragiri temple:கனமழை! பெளர்ணமி வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
தென் கைலாயம் என்று அழைக்கப்படும் சதுரகிரி மலையில் வரும் 8ஆம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி வழிபாடு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்த நிலையில், மழை காரணமாக அனுமதி திடீரென மறுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாதம்தோறும் பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாள்களில் பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
இதையடுத்து தமிழ் மாதமான கார்த்திகை பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு டிசம்பர் 5 முதல் 8 வரையிலான நாள்களுக்கு கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக, மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்கனவே அனுமதி அளித்திருந்தபோதிலும், மழை காரணமாக பக்தர்கள் மலை கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
முன்னரே அனுமதி அளிக்கப்பட்டதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் இன்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையடுத்து மழை இல்லாவிட்டால் நாளை முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.