Palani Temple: முருக பக்தர்கள் மீது தாக்குதல்.. மண்டையை உடைத்த பாதுகாவலர்.. பழனி கோயிலில் பரபரப்பு!
பழனி முருகன் கோயிலில் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில் உலக பிரசித்தி பெற்றது. இத் திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை ஆகும். இதுதவிர வார நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் முருகனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், பழனி மலை கோயிலுக்கு ஈரோடு, எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று (ஜன.30) வருகை புரிந்தனர். இதில் ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்து செல்ல சிறப்பு வழி கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, எடப்பாடி பக்தர்களும் முந்தியடித்துக் கொண்டு அந்த வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.
இந்த நிலையில் கோயில் பாதுகாவலர்கள் மற்றும் அதிகாரிகள் எடப்பாடியைச் சேர்ந்த சந்திரன் என்பவரை இழுத்துக் கொண்டு சென்று தாக்கியதாகவும், இதில் அவரது மண்டை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சந்திரன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பழனி மலைக்கோயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
