Aavin Milk: 2-வது நாளாக ஆவின் பால் விநியோகம் தாமதம்..இது தான் காரணமா?
Sholinganallur: சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து இரண்டாவது நாளாக இன்றும் பால் விநியோகம் தாமதமாகியுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பாக நாள்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே தற்போது, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிர்வாகத்துக்கு கிடைக்கக்கூடிய பால் அளவு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைக்கு பால் வரத்து குறைவு மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் குறைவாக வருவது உள்ளிட்ட பிரச்சினைகளால் நேற்று தென் சென்னை பகுதிகளில் சுமார் நான்கு மணி நேரம் தாமதமாக பால் விநியோகம் நடைபெற்ற நிலையில் மின்சாரம் பிரச்சினை காரணமாக தாமதமானதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் பொய்யான தகவல் பரப்பப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கும் அவ்வாறே பொய்யான தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து இரண்டாவது நாளாக இன்றும் பால் விநியோகம் தாமதமாக விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது நிலவரப்படி இன்னும் 10க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள் பால் பண்ணைக்குள் பால் பாக்கெட்டுகள் ஏற்றுவதற்காக காத்து நிற்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னை பெருநகர மக்களின் தேவைக்காக மட்டும் தினமும் 14 லட்சம் லிட்டர் பால் தேவை. இதற்காக அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள 3 பால் பண்ணையில் இருந்து பால் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து தினமும் 5.50 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்ய வேண்டும். இந்நிலையில் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து இரண்டாவது நாளாக இன்றும் பால் விநியோகம் தாமதமாக விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்