Kallakurichi Hooch Tragedy: கள்ளச்சாராயம் விவகாரம்.. பலி எண்ணிக்கை 58ஆக உயர்வு - 12 பேருக்கு கண்பார்வை இழப்பு!
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 பெண்கள் உட்பட 58 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கள்ளச்சாராய மரணம்
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 18ஆம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து 150-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்ததால் பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட பலரும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், பலரும் உயிரிழந்தனர். நேற்று முன் தினம் வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக இருந்த்போது, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
10 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தமிழக காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாராயத்தில் விஷத்தன்மை கொண்ட மெத்தனால் ரசாயனப் பொருள் அதிக அளவு கலக்கப்பட்டதே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, சட்ட விரோதமாக மெத்தனால் விற்பனை செய்தவர்கள், கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது காவல்துறை. கள்ளச்சாராயம் விற்பனைக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரி நியமனம்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
உயிரிழப்பு 58 ஆக உயர்வு
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து நேற்றுவரை 56 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவங்கூரை சேர்ந்த மணிகண்டன் என்ற 34 வயது இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 பெண்கள் உட்பட 58 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்