தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா ஆட்டம் ஆரம்பம் - அச்சத்தில் மக்கள்!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 25 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்வதற்கு பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மே 29 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபரத் தகவலில், “தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 14 ஆயிரத்து 407 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்மூலம் சிங்கப்பூரிலிருந்து வந்த 3 நபர்களுக்கும், அமெரிக்காவிலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், தமிழ்நாட்டில் 72 நபர்களுக்கும் என 77 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 54 லட்சத்து 23 ஆயிரத்து 853 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 55 ஆயிரத்து 287 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணம் அடைந்த 41 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 814 என அதிகரித்துள்ளது.
தடுப்பூசி தொடர்ந்து செலுத்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் இறப்பு என்பது கடந்த 2 மாதத்திற்கு மேல் இல்லாமல் உள்ளது. எனவே இறந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என தொடர்ந்து நீடித்து வருகிறது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 32 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 30 நபர்களுக்கும் கோயம்புத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று நபர்களுக்கும் அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் விமானத்தின் மூலம் வந்த 5 நபர்களுக்கும் என 77 நபர்களுக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்