Ma Subramanian: ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி - அமைச்சர் உறுதி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ma Subramanian: ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி - அமைச்சர் உறுதி

Ma Subramanian: ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி - அமைச்சர் உறுதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 02, 2023 02:40 PM IST

கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2366 பேருக்கு கூடுதல் சம்பளத்துடன் கூடிய மாற்றுப்பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

சென்னை ESIC கல்லூரி மருத்துவமனையில் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை ESIC கல்லூரி மருத்துவமனையில் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

சமூக வலைத்தளங்களில் ஒரு சில பேர் பொய்யான செய்திகளை பரப்புவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள். அதை தடுக்கும் விதமாக மருத்துவ துறை சார்பில் நலம் 365 எனும் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மக்களின் உடல்நலம் குறித்த அவசியம் குறித்து விழிப்புணர்வு விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த யூடியூப் சேனலில் மாதத்தில் ஒரு நாள் மக்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை சார்ந்த பிரச்னைகளை கேட்டறிந்து கலந்துரையாடல் செய்யப்படும். இது மருத்துவ துறை மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த சேனல் உதவியாக இருக்கும்.

யோகா, மூச்சு பயிற்சி மக்களுக்கு சொல்லி தரவும், உணவு பொருள்களின் அவசியம், அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யவும் இந்த யூடியூப் சேனல் உதவியாக இருக்கும். எந்நேரமும் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த சேனல் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் அமையும்.

இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.

இந்த நிகழ்வுக்கு பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வணிக ரீதியான நோக்கமின்றி மக்களின் சுகாதாரத்தை பேணி பாதுகாக்க யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டது. 24 மணிநேரமும் இந்த சேனல் இயங்கும். யோகா, உடற்பயிற்சி அவசியம், உணவு பழக்க வழக்கங்கள், மகப்பேறு குழந்தை சுகப்பிரசவம்தான் சிறந்தது குறித்து, சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி அவசியம் குறித்தும் இந்த சேனலில் ஒளிபரப்பப்படும் என்றார்.

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, "கடந்த அதிமுக ஆட்சியில் 2019ஆம் ஆண்டு 2347 பேர் எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் விண்ணப்பித்தனர். அதில், 2323 பேர் பணியில் சேர்ந்துவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு, எம்ஆர்பி மூலம் விண்ணப்பித்த 5736 பேரில் 2366 பேரில் பணியில் சேர்ந்தனர்.

இந்த பணி நியமனத்தில் அதிமுக அரசால் கொரோனா தொற்றை காரணம் காட்டி சான்றிதழ் பரிசோதனை இல்லாமலும், விகிதாச்சார அடிப்படையில் இன்றியும், அடிப்படை விதிமுறைகளை மீறி பணியமர்த்தப்பட்டனர்.

பேரிடர் காலத்தில் விதிமுறை மீறி பணிக்கு வந்தவர்களை பணியில் சேர்க்கவேண்டாம் என்று நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இவர்களை பணியை விட்டு அனுப்பும் நோக்கம் அரசுக்கு இல்லை.

நீதிமன்றங்களின் உத்தரவால் நான்கு மாதங்களாக ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், பணி நீட்டிப்பு செய்ய இயலாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களின் நலன் கருதி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி, பொது சுகாதார துறையில் காலியாக உள்ள 2200 செவிலியர்கள் பணியிடங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் காலியாக உள்ள 270 இடைநிலை சுகாதார செவிலியர்கள் பணியிடங்களுக்கு, கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த பணி நியமனமானது, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் ரூ. 14 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருந்தார்கள். தற்போது, மாற்று பணியிடம் காரணமாக அவர்களுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். ஆனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் என்பது சாத்தியமில்லை. இதனை கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் உணர வேண்டும்.

மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் மனிதாபிமான அடிப்படையில், சுகாதார துறையின் மீது அக்கறை கொண்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்.

சீனாவில் இருந்து தமிழகம் வந்த 2 பேர் உள்பட வெளிநாட்டில் இருந்து வந்த மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களது மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு பரிசோதனை செய்ததில், 6 பேரின் மாதிரிகளின் முடிவு வெளியாகியுள்ளது. அந்த 6 பேரில் பி.எஃப்.7 என்ற ஒமைக்கிரான் வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் 93 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்ததில், அதில் 91 பேருக்கு ஒமைக்கிரான் வகை வைரஸ் பாதிப்பும், 2 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.