Rain Alert: ’மக்களே உஷார்! நாளை எங்கு அதிமழை பெய்யும்?’ உடைத்து பேசிய பாலச்சந்திரன்!
”Northeast Monsoon: அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தரப்பட்ட சிவப்பு நிற எச்சரிக்கை தொடர்கிறது”
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குமரிக்கடல் மற்றும் அதனை உள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிகனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக் கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தரப்பட்ட சிவப்பு நிற எச்சரிக்கை தொடர்கிறது.
மேலும் விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.