Coimbatore : கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா? நெல்லையை தொடர்ந்து கோவையா.. என்ன நடக்கிறது திமுகவில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore : கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா? நெல்லையை தொடர்ந்து கோவையா.. என்ன நடக்கிறது திமுகவில்!

Coimbatore : கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா? நெல்லையை தொடர்ந்து கோவையா.. என்ன நடக்கிறது திமுகவில்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 02, 2024 04:39 PM IST

Coimbatore Mayor : கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா? (கோப்புப்படம்)
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா? (கோப்புப்படம்)

தமிழகத்தில் சென்னையை அடுத்த மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகராட்சி மேயர்

கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மேலும் மூன்று பேர் அதிமுக கவுன்சிலர்கள்.  கோவை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வருகிறார். இவர் மாநகராட்சி தேர்தலில் கோவையில் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளார். 

இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்த குமாரின் தலையீடு மிக முக்கிய காரணம் என்று திமுக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.

இதனால் திமுக கவுன்சிலர்கள் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிதாக நம்பிக்கை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திமுக கட்சி கவுன்சிலர்களுக்கும் இவருக்கும் இடையில் உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேயர் ராஜினாமா?

இந்த நிலையில் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பான கடிதத்தை அவர் திமுக மேலிடத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவேளை மேயர் பதவி கல்பனாவிடமிருந்து பறிக்கப்படும் பட்சத்தில், அந்த பதவியை கைப்பற்றும் அடுத்த திமுக பெண் கவுன்சிலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா?

நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்களை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். 

முன்னதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கடிதத்தை கமிஷனரிடம் கவுன்சிலர்கள் வழங்கினர்.  இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் மாநகராட்சிக்கு நேரில் சென்று அனைவரையும் சமாதானப்படுத்தினர்.

 இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்றவர்கள் மேயரை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதைத்தொடர்ந்து திமுக தலைமை இடத்தில் இருந்து சரவணனுக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சென்று சென்றதாக கூறப்படுகிறது. அவரை அமைச்சர் கே.என்.நேரு நேரில் அழைத்து மாநகராட்சி பிரச்சனை குறித்து விவரங்களை கேட்டு அறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் தற்போது மேயர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் வழங்கி விட்டதாக செய்திகள் பரவியது ஏற்கனவே நெல்லையில் மாநகராட்சி  மேயர் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில மாநகராட்சிகளின் மேயர்களும் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.