கோவை குண்டுவெடிப்பு; ஐ.எஸ் அமைப்பு பெறுப்பேற்ற நிலையில் புலனாய்வு முகமை விசாரணை
Coimbatore car blast:கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு ஆகியவற்றிற்கு ஐ.எஸ் அமைப்பு சமீபத்தில் பொறுப்பேற்று இருக்கும் நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறது.
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்களை சீர் குலைக்கும் நோக்கில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் கோவையில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தீவிரவாத அமைப்புகளின் பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த தாக்குதலை முன்னின்று நடத்திய ஜமிஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களில் ஐந்து பேரை தற்பொழுது இரண்டாவது முறையாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெரோஸ் இஸ்மாயில் ,உமர்பாரூக், முகமது அசாருதீன் ,நவாஸ் இஸ்மாயில், பெரோஸ்கான் ஆகிய ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ஐந்து பேரிடமும் ஏழு நாட்கள் விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்தது.
இதனையடுத்து 5 பேரையும் சென்னையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை அழைத்து வந்துள்ளனர். மேலும் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை முகாம் அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் 16 ம் தேதி இவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்க இருக்கின்றனர். 16 ம் தேதி மாலை இவர்கள் ஐந்து பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு ஆகியவற்றிற்கு ஐ.எஸ் அமைப்பு சமீபத்தில் பொறுப்பேற்று இருக்கும் நிலையில் தற்பொழுது இவர்கள் ஐந்து பேரிடமும் மீண்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டாபிக்ஸ்