Kalaignar Centenary Celebration: நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பிதான் கலைஞர்-முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Tamilnadu CM Stalin: ‘இந்தியாவின் பிரதமர்களை பல்வேறு முறை உருவாக்கியவர். தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்ல - இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் இருந்தார் கலைஞர்.’
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.5.2023) தலைமைச் செயலகத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரை:
தமிழினத் தலைவர் - முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்போடும் எழுச்சியுடனும் கொண்டாடுவது குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அனைவர்க்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்ந்தவர் கலைஞர். 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் அமர்ந்து அரிய வாதங்களை எடுத்து வைத்தவர். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர்களை - துணைக் குடியரசுத் தலைவர்களை பல முறை தேர்ந்தெடுத்து அவர்களை அந்தப் பொறுப்புகளில் அமர்த்தியவர்.
இந்தியாவின் பிரதமர்களை பல்வேறு முறை உருவாக்கியவர். தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்ல - இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் இருந்தார் கலைஞர்.
முதல் முறை ஆட்சிக்கு வந்த போது முதலமைச்சர் கலைஞர், ''நான் முதலமைச்சராக கோட்டையில் இருந்தாலும், அங்கிருந்தபடியே குடிசைகளைப் பற்றியே சிந்திப்பவன்" என்றார்.
தன்னுடைய ஆட்சிக்கு மூன்று இலக்கணம் இருப்பதாக கலைஞர் சொன்னார்கள்.
1. சமுதாய சீர்திருத்தத் தொண்டு
2. வளர்ச்சிப் பணிகள்
3. சமதர்ம நோக்கு
- இவை மூன்றும்தான் அவருடைய ஆட்சியின் இலக்கணமாக அமைந்திருந்தது.
அந்த இலக்கணத்தின் அடிப்படையில்தான் ஆட்சி செலுத்தினார். அதனால் அனைத்து துறைகளும் ஒருசேர வளர்ந்தது.
* அன்னைத் தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதி
* ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டு உரிமை
* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம்
* மகளிருக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டம்
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள்
* உழவர்களுக்கு இலவச மின்சாரம்
* கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடிக் கடன் ரத்து
* சென்னை தரமணியில் டைட்டல் பார்க்
* சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம்
* சிப்காட், சிட்கோ, தொழில் வளாகங்கள் உருவாக்கம்
* தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியது
* நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்
* அவசர ஆம்புலென்ஸ் 108 சேவை அறிமுகம்
* இலவச மருத்துவக் காப்பீடுத் திட்டம்
* மினி பஸ்களை கொண்டு வந்தது
* உழவர் சந்தைகளை அமைத்தது
* ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி, கைம்பெண் மறுமண நிதி உதவி, கர்ப்பிணிகளுக்கு உதவி ஆகிய திட்டங்கள்
* பல்லாயிரம் கோயில்களுக்கு திருப்பணிகள்
* அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு
* உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்காக 33 விழுக்காடு இடஒதுக்கீடு
* இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கியது
* மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்
* அனைவரும் இணைந்து வாழ சமத்துவபுரங்கள் உருவாக்கியது
* இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது
* உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தது
* நுழைவுத் தேர்வு ரத்து
* மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது
* சேலம் உருக்காலை, சேலம் புதிய ரயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் ஆகியவை உருவாக்கம்
* மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்கியது
* ஏராளமான பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை - அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது
இப்படி நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பிதான் 'தமிழினத் தலைவர்' கலைஞர்
அப்படிப்பட்ட தலைவருக்குத்தான் அரசு சார்பில் நூற்றாண்டு கொண்டாடுவதற்கான ஆலோசனையில் நாம் ஈடுபட்டிருக்கிறோம்.
'தமிழினத் தலைவர்' கலைஞரைப் பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு அவர் நிறைவேற்றிக் காட்டிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுபவையாக இந்த விழாக்கள் அமைய வேண்டும்.
மாதம் தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்தலாம்.
பெரிய பெரிய விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும். இன்றைய நவீன ஊடகங்கள் அனைத்தையும் இதற்கு பயன்படுத்த வேண்டும். செய்தி மக்கள் தொடர்புத் துறை இதில் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக அது அமைய வேண்டும்.
அமைச்சர்கள் கொடுத்த ஆலோசனைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி, தொகுத்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
நூற்றாண்டு விழா தலைமைக் குழு, விழாக் குழு, மலர்க்குழு, கண்காட்சிக்குழு போன்ற குழுக்கள் அமைச்சர்களை உள்ளடக்கி அமைக்கப்படும்.
இந்தக் குழுக்கள் தங்களுக்குள் அடிக்கடி கூடிப் பேசி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த கூட்டம் என்பது தொடக்கக் கூட்டம் தான். தொடர்ந்து நாம் பேசுவோம். இது குறித்த விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
அதற்கேற்ற வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று கேட்டுக் கொண்டு, இந்த அளவில் எனது உரையை நிறைவு செய்கிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
டாபிக்ஸ்