Iraianbu IAS: ’ஓய்வுக்கு பிறகு என்ன செய்ய போகிறேன்’ மனம் திறந்த இறையன்பு ஐ.ஏ.எஸ்
ஓய்வு பெற உள்ள தலைமை செயலாளர் வெ.இறையன்புவை அவரது அறைக்கு சென்று பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர்
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு கடந்த 7.5.2021 அன்று நியமிக்கப்பட்டார். தற்போது அவர் 60 வயதை நிறைவு செய்யும் நிலையில் இன்றைய தினம் பணி ஓய்வு பெறுகிறார். எனவே தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமனம் செய்து அரசாணை ஒன்றை இறையன்பு நேற்று பிறப்பித்தார்.
புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
அதில் நகராட்சி நிர்வாகத்துறையின் கூடுதல் தலைமை செயலாளார் சிவ்தாஸ் மீனா அங்கிருந்து இடமற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். தலைமை செயலாளர் இறையன்பு இன்று பிற்பகல் ஓய்வு பெறுகிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
யார் இந்த வெ.இறையன்பு
சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 15 ஆவது இடமும் தமிழ்நாடு அளவில் முதல் இடமும் பிடித்தார்.
விவசாயத்தில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம், உளவியலில் முதுகலைப் பட்டம், வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம், மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம் பெற்றுள்ள இறையன்பு ஐ.ஏ.எஸ், இந்தி மொழியில் பிரவீன், சமஸ்கிருதத்தில் கோவிதஹா வரை முடித்துள்ளார்.
பல்வேறு அரசுத்துறைகளில் பணி
1990ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்ட உதவி ஆட்சியராக தனது பணியை தொடங்கிய அவர் காஞ்சிபுரம் ஆட்சியர், செய்தி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை செயலர், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் முன்னதாக வகித்துள்ளார்.
எழுத்தாளர்
தனது இடையறாத அரசுப்பணிகளின் போதும் பத்தாயிரம் மைல் பயணம் உள்ளிட்ட 154 புத்தகங்களை எழுதி உள்ளார். அதுமட்டுமின்றி தான் தலைமை செயலாளராக வந்தவுடன் தான் எழுதிய புத்தகங்களை அரசு நூலகங்களில் வாங்கக்கூடாது என்று சுற்றிக்கையை வெளியிட்டிருந்தார்.
ஓய்வுக்கு பிறகு என்ன?
ஓய்வு பெற உள்ள தலைமை செயலாளர் வெ.இறையன்புவை அவரது அறைக்கு சென்று பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது “பணி ஓய்வுக்கு பிறகு என்ன செய்ய வேண்டும்? என்ற எதிர்காலம் பற்றி இதுவரை திட்டமிடவில்லை. முதலில் ஒரு மாதம் ஓய்வில் இருப்பேன். பின்னர் சமுதாயம் என்னை எப்படி பயன்படுத்த விரும்புகிறதோ, அதற்கேற்றபடி செயல்படுவேன். சமுதாயம் எதை நோக்கி என்னை கொண்டு செல்கிறதோ, அதை நோக்கி இருக்கும். மாணவர்கள், இளைஞர்களுடன் என் பயணம் இருக்கும்” என்று கூறினார்.
டாபிக்ஸ்