Bomb Threat: ‘விமானம் வெடித்து சிதறும்’..மிரட்டலால் ஹைஅலர்ட்டில் சென்னை ஏர்போர்ட்!
சென்னையில் தனியார் விமான நிலைய நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆகாசா நிறுவனத்தின் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்தில் துவங்கப்பட்டது. துவங்கிய சில நாட்களிலேயே நிர்வாக காரணங்களால் ஆகாசா ஏர்லைன்ஸ் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தியது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள், பன்னாட்டு விமான நிலையங்களின் ஹேங்கர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் ஒரு விமானம், சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் ஆகாசா விமான நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டிருந்த மர்ம நபர் ஒருவர், 'ஆகாசா விமானம் வெடித்து சிதறும்' என மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள ஆகாசா நிறுவன அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தால் விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்ட மர்மநபர் யார்? முன்னாள் ஊழியர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? பயணிகள் யாரேனும் இதை செய்தார்களா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.