Cauvery: தமிழக எல்லைக்கு வரும் காவிரி நீர் 2500 கன அடியாக அதிகரிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cauvery: தமிழக எல்லைக்கு வரும் காவிரி நீர் 2500 கன அடியாக அதிகரிப்பு!

Cauvery: தமிழக எல்லைக்கு வரும் காவிரி நீர் 2500 கன அடியாக அதிகரிப்பு!

Kathiravan V HT Tamil
Jul 25, 2023 05:19 PM IST

“கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு என்பது வினாடிக்கு 17,000 கன அடியாக அதிகரிப்பு”

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிலிகுண்டுலு-தமிழக எல்லை
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிலிகுண்டுலு-தமிழக எல்லை

இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியாகவும், கபினி அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணை 124 அடியில் 101 அடியாகவும், கபினி அணை 84 அடியில் 81 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இரண்டு அணைகளில் இருந்து நீர் திறப்பு என்பது வினாடிக்கு 17,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியவுடன், கடந்த சனிக்கிழமை மாலை கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2400 கன அடி என மொத்தம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 4800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து மழை தீவிரமடைந்து வருவதால், நீர் திறப்பு என்பது, வினாடிக்கு 7,000 கன அடி, 12,000 கன அடி என படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இன்று மாலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2000 கனஅடி என மொத்தம் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதற்கட்டமாக திறக்கப்பட்ட 4,800 கன அடி தண்ணீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்தது. இன்று காலை வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, தற்பொழுது 2500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நாளை மாலைக்குள் 17,000 கன அடி நீரும் தமிழக எல்லையான பிலுகுண்டுலுவுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க வருவதால், காவிரி ஆற்றங்கரையில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மழை தீவிரத்தால் எந்த நேரத்திலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல், ஊட்டமலை போன்ற பகுதிகளில் வாகனத்தில் ஒலிபெருக்கி வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கும் போது கவனமாக குளிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் காவிரியில் இருந்து தண்ணீர் வராததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் கடைமடை மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் காவிரி நீர் சரியாக செல்லாத நிலை இருந்து வந்தது. தற்போது கர்நாடகா, கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.