Courtalam: சாரல் மழை இல்லை! நிலவும் குளிர்ச்சியான சூழ்நிலை அனுபவிக்க படையெடுக்கும் மக்கள் - படகு சவாரி தொடக்கம்
சாரல் மழை குறைந்த நிலையில் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சுற்றுலாதலமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியதுடன், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாள்கள் பெரிதாக மழை பொலிவு இல்லாத நிலையில், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம், சிற்றருவி என சுற்றுலா பயணிகள் செல்லும் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.
சாரல் மழையில் இல்லாத நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் விடுமுறை நாள்கள் இல்லாத போதிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இரவு நேரத்திலும் சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிகரித்துள்ளது.
இதையடுத்து குற்றால சீசன் களைகட்ட தொடங்கியிருக்கும் நிலையில், அங்கு சுற்றுலா பயணிகளுக்கான பொழுதுபோக்கு இடமாக இருந்து வரும் படகு குழாமில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
ஐந்தருவி சாலையில் வெண்ணைமடை குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா துறை, சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடத்தப்படும் இந்த படகு குழாமில் படகு சவாரி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இங்கு படகு சவாரி மேற்கொள்வதற்காக 25 படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், 2 பேர், 4 பேர், 4 பேர் துடுப்பு, தனி நபர் படகுகள் உள்ளன. இந்த படகுகளில் பயணம் மேற்கொள்ள குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 150 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
குற்றாலத்தில் நிலவி வரும் இதமான சூழ்நிலையில் குளிப்பதற்காக வரும் சுற்றுலா பயணிகள், பழமை வாய்ந்த இந்த படகு குழாமில் தவறாமல் படகு சவாரி செய்வது வழக்கம். குற்றால சீசனின் மற்றொரு சிறப்பு அம்சமாக சாரல் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவானது ஜூலை கடைசி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்