Best police station: முதலமைச்சர் விருது வென்ற சிறந்த காவல் நிலையம்!
74வது குடியரசு தினத்தையொட்டி சென்னை உழைப்பாளர் சிலை அருகே முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
தேசியக் கொடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலத்த பாதுகாப்புடன் விழா நிகழ்விடத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் 8 மணியளவில் கொடியேற்றும் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். சரியாக 8 மணிக்கு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
அதைத் தொடர்ந்து அணிவகுப்பு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
குடியரசு தின விழாவில் வழக்கமாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கெளரவிப்பார்.
அதன்படி, இன்று வீர தீர செயல்களுக்கான அண்ணா விருதை சென்னை அமைந்தக்கரை தலைமைக் காவலர் சரவணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை அளிக்கப்பட்டது. குடியாத்தத்தில் ஆண் செவிலியராக பணிபுரியும் ஜெயக்குமார் பொன்னரசுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.அந்தோணி சாமி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.
மேலும் 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
சென்னை மாவட்டம், மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமையக காவல் ஆய்வாளர் த.எ.பிரியதர்ஷினிக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. இதேபோல், தஞ்சை மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயமோகனுக்கு காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. சேலம், விழுப்புரம் நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர்கள் சகாதேவன், இனாயத் பாஷாவுக்கும் இந்த பதக்கத்தை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திருப்பூர் வடக்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருதை வென்றது. இந்த விருதை அந்த காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமார் பெற்றுக் கொண்டார்.
திருச்சி கோட்டை காவல் நிலையம் இரண்டாவது பரிசையும், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் 3வது பரிசையும் வென்றது.
கோவை இனயத்துல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி வசந்தாவுக்கு வேளாண்துறை சிறப்பு விருது வழங்கப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஆலவயல் கிராமத்தில் 6 ஏக்கர் புன்செய் நிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாகா செம்மை நெல் சாகுபடி முறையை பின்பற்றி வருகிறார் வசந்தா.
டாபிக்ஸ்