HT Special: காலம் கடந்து கம்பீரமாக நிற்கும் திருச்சி 'மலைக்கோட்டை'
Trichy RockFort: திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இந்த மலைக்கோட்டையில் உள்ள மலை சுமார் 3,400 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பெருமையும் புகழும் உண்டு. அந்த வகையில் தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. தொன்மை வாய்ந்த மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் ஆகியவற்றை கொண்ட ஒரு தொகுதியாக மலைக்கோட்டை திகழ்கிறது. நடுவில் ஒரு மலையும், அதனை சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் 'மலைக்கோட்டை' என்று அழைக்கப்படுகிறது.
வியநகரப் பேரரசரால் கட்டப்பட்ட இக்கோட்டை துவக்கத்தில் ராணுவத் தளவாடங்கள் வைப்பதற்கும், பின்னர் ஆங்கிலேயர்களால் கர்நாடக போருக்கும் பயன்படுத்தப்பட்டது. 14-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், மாலிக்கபூரின் தென்னிந்திய படையெடுப்பிற்குப் பின், இக்கோட்டை தில்லி சுல்தானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது.
16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், விஜயநகரப் பேரரசின் ஆளுநர்களாக இருந்த மதுரை நாயக்கர்களிடம் வந்தது. அவர்கள் இக்கோட்டைக் கோயிலையும் கட்டி, இதை ஒரு வாணிபத் தலமாக உருவாக்கினர். பிரெஞ்சுடன் இணைந்த சந்தா சாகிப், ராணி மீனாட்சியிடமிருந்து இக்கோட்டையைப் பெற்றார். பின் கர்நாடக யுத்தத்தில் (ஆற்காடு நவாப்) இது ஆங்கிலேயர் கைக்கு மாறியது.
273 அடி உயரத்தில் உள்ள மலையில் தாயுமானவர், மட்டுவார் குழலி, உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர், முத்துக்குமாரசாமி ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் இம்மலையில் தனிச் சிறப்புடன் கோயில்கள் உள்ளன. 178 படிகள் ஏறி முடித்தால் ஸ்ரீதாயுமானவர் திருக்கோயிலை அடையலாம். அடிவாரத்தில் இருந்து 417 படிகள் ஏறினால் உச்சிப் பிள்ளையார் கோயிலை அடையலாம். இந்த உச்சி பிள்ளையார் கோயிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த மலை உச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோயில், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, திருவானைக்காவல் கோயில் ஆகியவை நன்கு புலப்படும்.
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மையப்பகுதியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இந்த மலைக்கோட்டையில் உள்ள மலை சுமார் 3,400 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது. இந்த மலைமேல் உள்ள பாறைகள் மீது இரண்டு தளகட்டிட அமைப்பை கொண்டு உலகில் வேறு எங்கும் இல்லாத அதிசயமாக தொன்மையான கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த மலைக்கோட்டை திருச்சியின் அடையாளமாக மட்டுமின்றி தமிழகத்திலேயே சிறப்பு வாய்ந்த வரலாற்று சின்னமாகவும் விளங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.