Heavy Rain Alert: ’செங்கல்பட்டு முதல் புதுக்கோட்டை வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை!’ வானிலை ஆய்வு மையம் அலார்ட்
”அடுத்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து இன்று காலை மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 510 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். வரும் 17ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா கடல் பகுதியில் நிலவக்கூடும் என கூறினார்.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது, அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகம் பகுதியில் 19 செ.மீ மழை பதிவாகி உள்ளது. 36 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது என தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, விழுப்புரம்,கடலூர், கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் குமரிக்கடல் மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கட்ற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்தபகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கூறினார்.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைகால் பகுதிகளில் கடந்த அக்டோபர் ஒன்று முதல் இன்று வரை பதிவான மழையின் அளவு 24 செ.மீ; சராசரி அளவு 27 செ.மீ என்பதால் இல்பை விட 13 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ளது.