Aavin Milk: ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விலை உயர்வா? - ஆவின் நிர்வாகம் மறுப்பு
ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விலை உயர்த்தப்படவில்லை என்று ஆவின் நிர்வாகம் மறுத்துள்ளது.
பால் … சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக பால் அமைந்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் நிர்வாகம் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலையை உயர்த்தியது. வெண்ணெய், நெய் ஆகியவற்றின் விலையும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலநிற பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் ஆரஞ்சு மற்றும் சிவப்புநிற பாக்கெட் பால் சில்லறை விலை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது.
இதனால் பெரும்பாலான மக்கள் ஆவின் பச்சை நிற பாக்கெட் பாலுக்கு மாறினர். இதனால் பச்சை நிற பாக்கெட் பாலுக்கு தேவை அதிகரித்து உள்ளது.
இதனிடையே ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விலை இன்று ( ஜன.1 ) முதல் அரை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.
இதனிடையே பச்சை நிற பாக்கெட் பாலில் புத்தாண்டு வாழ்த்துடன், அட்டைதாரருக்கு அரை லிட்டர் பால் ரூ.23 ஆகவும், சில்லரை விலையில் ரூ.24 ஆகவும் உயர்த்தி அச்சிடப்பட்டு இருந்தது. இதனால், பச்சை நிற பாக்கெட் பால் விலை உயர்த்தப்பட உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் பால் முகவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், ”ஆவின் பால் முகவர்களுக்கு நேற்று (டிச. 31 ) மதியம் சென்னையில் விநியோகம் செய்யப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளில் (ஜன. 01) அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால்) 22ரூபாய்க்கு பதிலாக 24 ரூபாய், மாதாந்திர அட்டைதாரர்களுக்கான விலை 21.00க்கு பதிலாக 23.00ரூபாய் என அச்சிடப்பட்டு வந்துள்ளது.
ஒருவேளை ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் விற்பனை விலையை முன்னறிவிப்பின்றி ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளதா? என்கிற சந்தேகம் எழுகிறது. எனவே இதனை தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து ஆவின் நிர்வாக இயக்குனர், ”ஆவின் பால் பாக்கெட்டுகள் மீது அச்சிடப்படும் விலை அச்சு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு (Coding Error) காரணமாக பால் பாக்கெட்களின் மீது சரியான விலைக்கு பதிலாக வேறு விலை அச்சாகி விட்டது என்பதைத் தவிர ஆவின் பால் பாக்கெட்டுகள் எவ்வித விலை மாற்றமும் இல்லை மற்றும் விலை உயர்வும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்தத் தவறு உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது. இதற்கு காரணமான உரிய அதிகாரிகள் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என கூறினார்.