Aavin Delite Milk: 90 நாள்கள் வரை பயன்படுத்தும் ஆவின் டிலைட் பால் அறிமுகம்
மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக Aavin Delight என்ற பசும்பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பால் 90 நாள்கள் வரை கெடாமல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. மழைகாலத்தில் மின்வெட்டு, வெள்ளநீர் வடியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தொடர் மழை பெய்யும் காலங்களில் பால் உள்பட அத்தியாவசிய உணவு பொருள்கள் சேமித்து வைக்க வேண்டிய சூழலும் உருவாகும். இதை கருத்தில் கொண்டு 90 நாள்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்த கூடிய டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
முன்பு இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் மக்களுக்குப் பால் பவுடர் போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் இனி டிலைட் பால் பாக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிலைட் பால் குளிர்சாதன வசதி ஏதும் இல்லாமல் 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். ஆவின் டிலைட் பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ. 30க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.
பருவமழையை கருத்தில் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள இந்த பால், UHT எனப்படும் Ultra High Temperature தொழில்நுட்ப முறையில் தயார் செய்யப்படுகிறது.
இந்த பால் பாக்கெட்டுகள் திறப்பதற்கு முன்பு, பிரிட்ஜில் வைக்காமல் இருந்தால் 90 நாள்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். தற்போது பருவமழை காலத்தின் தேவையை பொறுத்து நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் வரை ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப இதன் தயாரிப்பு பணிகள் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.