Aavin ghee price increased: சர்ரென நெய் விலையையும் உயர்த்தியது ஆவின்!
சென்னை: பால் விலையை தொடர்ந்து, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூர் பாக்கு, குலாப் ஜாமுன், ரசகுல்லா உள்ளிட்ட 235 வகையான பால் உப பொருட்களை தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை ஏற்கெனவே உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெய்யின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் நெய் ரூ.580ல் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாகவும், 500 மி.லி நெய் ரூ. 290ல் இருந்து 315 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி.லி., ரூ.130ல் இருந்து 145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 லிட்டர் நெய் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேலும் 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு இருப்பது ஏழை, எளிய நடுத்தர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொழுப்புச் சத்து நிறைந்த ஆரஞ்சு நிற பிரீமியம் பாலின் சில்லறை விலை லிட்டர் 48 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்த்தியது ஆவின் நிர்வாகம். ஆனால், ஆவின் அட்டைதாரர்களுக்கு வழக்கமான 46 ரூபாய் விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதுபோல 6.5 சதவீதம் கொழுப்புச் சத்து நிறைந்த சிவப்பு நிற டீமேட் பாலின் விலையானது லிட்டர் 60 ரூபாயில் இருந்து ரூ. 76 ஆக உயர்த்தப்பட்டது. மேலும், பிரவுன் நிற கோல்ட் பாலின் விலையானது லிட்டர் ரூ. 47ல் இருந்து 56 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்