ஒரே கல்லுல 3 மாங்கா! ஒரே நேரத்தில் 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த மாணவி!
மாணவி மைதிலியின் இந்த சாதனை, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், அமெரிக்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யூரோப்பியன் புக் ஆப் ரெக்காட்ஸ் என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.
கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மைதிலி என்ற பள்ளி மாணவி தீப்பந்தம் சுற்றிய இரட்டை சிலம்பத்தை தொடர்ந்து மூன்று மணி நேரம் சுழற்றி 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சின்ன வேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஐந்து வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம் , அடிமுறை , வேல்கம்பு , வாள்வீச்சு, வளரி மான்கொம்பு , சுருள்வாள் , போன்ற , பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத் தரப்பட்டு வருகிறது. மேலும் இங்கு நன்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பலர் உலக சாதனையாளர்களாகவும் உருவாகி உள்ளனர்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார், சத்யா ஆகியோரின் மகள் மைதிலி. இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே முல்லை தற்காப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். மைதிலி தீப்பந்தம் சுற்றிய இரட்டை சிலம்பத்தை தொடர்ந்து மூன்று மணி நேரம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார். சர்வதேச மகளிர் மற்றும் குழந்தைகள் அறிவியல் தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மைதிலி தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றிய சாதனை படைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்களும் பெரியவர்களும் கை தட்டி மாணவி தொடர்ந்து உற்சாகப்படுத்தினர். மாணவி மைதிலியின் இந்த சாதனை, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், அமெரிக்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யூரோப்பியன் புக் ஆப் ரெக்காட்ஸ் என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.
இதைத்தொடர்ந்து சாதனை சிறுமிக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை, பதக்கம், மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். அதேபோல் சாதனை சிறுமி மைதலிக்கு இந்தியா உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவரான சதாம் ஹீசேன் பாராட்டுகளை தெரிவித்தார். முல்லை தற்காப்பு கலை துணை பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவியை பாராட்டினர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்