Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் திமுக, பாமக, நாதக என மும்முனைப் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14 ஆம் தேதி துவங்கியது. 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
பலத்த பாதுகாப்பு
276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 42 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
82.48% வாக்குகள் பதிவு
காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக 6 மணியளவில் நிறைவடைந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 031 வாக்காளர்களில், 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அமைதியாக முடிந்த இந்தத் தேர்தலில், ஆண்கள் - 95,536, பெண்கள் - 99,994, பிறர் - 15 பேர் வாக்களித்துள்ளனர். மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகித்து வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்குப் பிறகு வாக்களிக்க வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஜூலை 13-ல் ரிசல்ட்
வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மும்முனை போட்டி
ஆளும் கட்சியான திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அதிமுக போட்டியில் இருந்து விலகி கொண்டதால், திமுகவுக்கு போட்டியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
பெண்ணுக்கு கத்திக்குத்து
முன்னதாக, வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், டி. கொசப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் கனிமொழி என்ற பெண் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தார். அங்கு வந்த அவரது முன்னாள் கணவர் ஏழுமலை கத்தியால் குத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய ஏழுமலையை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்