Independence day: பழமை விரும்பிகளை கவர்ந்த வின்டேஜ் கார், பைக்குகள் அணிவகுப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் பழங்கால கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்பு நடைபெற்றது. பழைய கார்கள், பைக்குகள் புத்தம்புது பொலிவுடன் பராமரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
மதுரை: நவீன தொழில்நுட்பக் காலமாகிவிட்டபோதும் பழம்பெருமைக்கு எப்போதும் பஞ்சமில்லை. பழங்கால கார்கள், நாணயங்கள் எனத் தொடங்கி சொப்புச்சாமான்கள் வரை இன்றைக்கும் மவுசு குறையாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. பழைமை விரும்பிகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அந்தவகையில் இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் பழங்காலக் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
75வது சுதந்திர தின ஆண்டுவிழாவை முன்னிட்டு மதுரையில் பழங்கால கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் கண்காட்சி மதுரையிலுள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் 1930 முதல் 1960 வரை அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன், ஜப்பான், இத்தாலி மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தயாரான ஆஸ்டின், டார்ஜ், மோரிஸ், பிளைமவுத், சிற்றோன், வோல்க்ஸ்வாகன், பென்ஸ், ஹிந்துஸ்தான், செவர்லெட், எலெகான்ட், ஜீப், உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட கார்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
அதேபோல் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட புல்லட் உள்பட பல்வேறு உலக நிறுவனங்கள் தயாரித்த பழங்கால மோட்டார் சைக்கிள்களும் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன.
இந்த கார் கண்காட்சியானது ஒரு நாள் மட்டும் நடைபெறுவதால் அவற்றைக் காண்பதற்கு கார் ஆர்வலர்கள் ஏராளமானோர் வந்து ஓட்டி பார்த்தும், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியடைந்தனர். மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்ட பகுதிகளில் இருந்தும் 35 பழமையான கார்கள், இரு சக்கர வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்தோடு வந்து இந்தப் பழமைவாய்ந்த கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் பார்த்து புகைப்படங்களை எடுத்துச் சென்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தடைபட்டு இரு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பற்றியும், அவற்றின் தயாரிப்பு, பயன்பாடு மற்றும் அதன் சிறப்புகளையும் உரிமையாளர்கள் எடுத்துரைத்தனர்.
டாபிக்ஸ்