Thoothukudi Firing: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 6-ம் ஆண்டு நினைவு தினம்..மறக்க முடியாத வடுவாக மாறிய மே 22 படுகொலை!
Thoothukudi Firing: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
Thoothukudi Firing: தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் உயிரிழந்தனர். 40 பேர் பெரிய அளவிலும், 64 பேர் சிறிய அளவிலும் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.
ஆணையம் விசாரணை
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் 2018, மே 23ல் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது. 36 கட்ட விசாரணையில் 1426 பேருக்கு சம்மன் அனுப்பி,1048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இறுதி அறிக்கை தாக்கல்
3000 பக்கங்கள் கொண்ட விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த 2022-ம் ஆண்டு மே 18 அன்று நீதிபதி அருணா ஜெகதீசன் சமர்பித்தார். அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் ஆணையத்தின் அறிக்கை 4 பகுதிகளாக தாக்கல் செய்யப்பட்டது.
அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தது என்ன?
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் 100-வது நாளையொட்டி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் இறங்க வாய்ப்புள்ளதாக முன்கூட்டியே தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இது காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடு, அலட்சியம் ஆகும். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். அவரை 4 இடங்களில் வைத்து சுட வைத்துள்ளதன் மூலம், அவரை அடியாள் போல் காவல்துறை பயன்படுத்தியுள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு நடைபெறும்போது கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல்துறையினர் வரம்பு மீறியும், அத்து மீறியும் செயல்பட்டு இருக்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. மேலும், துப்பாக்கி சூடு விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், 17 காவல் துறையினர் உட்பட 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் பரிந்துரைத்தது.
4 காவலர்கள் சஸ்பெண்ட்
ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் தெரிவித்தார். மேலும், ஆணையத்தின் ஆலோசனைகளை ஏற்று தொடர்புடைய துறைகளால் பொருத்தமான ஆணைகளை வழங்குவதற்காக விரிவாக ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது எனவும் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக துப்பாக்கி சூட்டில் நேரடியாக ஈடுபட்டதாக அப்போதைய காவல் ஆய்வாளர் திருமலை, முதல்நிலை காவலர் சுடலைக்கண்ணு உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
6-ம் ஆண்டு நினைவு தினம்
தமிழக வரலாற்றில் ஆறாத வடுவாக மாறிய தூத்துக்குடி துயரச் சம்பவத்தின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சல் செலுத்தும் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்சிகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
13 பேரின் உயிர்களை காவு வாங்கிய ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்று ஒரு தரப்பினரும், ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்