Kannada Inscription: 500 ஆண்டுகள் பழமையான கன்னடக் கல்வெட்டு கண்டுபிடிப்பு..எங்கு தொியுமா?
Kannada Inscription: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே சில்வார்பட்டி சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் க.பாரதிராஜா, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மதுரையில் நடத்திய முதற்கட்ட தொல்லியல் பயிற்சியில் கலந்து கொண்டபின் இப்பகுதியில் உள்ள தொல்லியல் தடயங்களை தேட ஆரம்பித்தார். அதன் விளைவாக இவ்வூரிலுள்ள விநாயகர் கோயில் நிலவறையில் ஒரு கன்னடக் கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார், ஆசிரியர் பயிற்றுநர் முருகேசபாண்டியன், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் அக்கல்வெட்டை நேரில் ஆய்வு செய்தனர்.
இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறுகையில், "விநாயகர் கோயிலில் உள்ள நிலவறையில் 3 அடி உயரம், 2½ அடி அகலம், ½ அடி பருமன் உள்ள ஒரு பலகைக் கல் உள்ளது. இது கோயில் சுவருடன் வைத்து பூசப்பட்டுள்ளது. இக்கல்லின் மேற்பகுதியில் சிவலிங்கம், சூரியன், சந்திரன் ஆகியவை கோட்டுருவங்களாக வெட்டப்பட்டுள்ளன. அதன் கீழே 4 வரியில் ஒரு கன்னடக் கல்வெட்டு உள்ளது.
இக்கல்வெட்டை மத்திய தொல்லியல் துறையின் சென்னைப் பிரிவு கல்வெட்டு ஆய்வாளர் யேசுபாபு படித்துக் கொடுத்தார். இதில் ‘ஸ்ரீஹாலபையா கௌடர கிராம வேல்பரார பட்டா’ என உள்ளதாகவும், கன்னட எழுத்துகளால் கன்னட மொழியில் எழுதப்பட்ட இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீஹாலபையா கவுண்டரின் ஆளுமைக்குள் உள்ள கிராமத்தின் எல்லைக்கல் என்பது இதன் பொருள்.
விஜயநகர, நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஊர் நிர்வாகத்திற்காக நாட்டாண்மை என்ற பதவி இருந்துள்ளது. இவர்களை மன்னர் அல்லது பாளையக்காரர்கள் நியமித்திருக்கிறார்கள். இவர்களின் பொறுப்பில் 1 முதல் 5 ஊர்கள் வரை இருந்துள்ளன. இம்மன்னர்களின் செப்பேடுகள் மூலம் இதை அறிய முடிகிறது. அப்போதைய இவ்வூரின் ஆட்சியாளராக ஸ்ரீஹாலபைய கவுண்டர் இருந்திருக்கலாம். இவர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கர்நாடகாவிலிருந்து இங்கு வந்து குடியேறியவராக இருக்கலாம். அச்சமயம் இவ்வூரில் விநாயகர், கதிர் நரசிங்கப் பெருமாள், சென்றாயப் பெருமாள் கோயில்கள் கட்டப்பட்டிருந்துள்ளன. அதன்பின் அழிந்துபோன இவ்வூரில் புதிதாகக் குடியேறியவர்கள், ஏற்கனவே இருந்த இக்கோயில்களை புனரமைத்து வழிபட்டு வருவதாக இக்கோயில் நிர்வாகி கணேசன் சுவாமி தெரிவித்தார்.
விநாயகர் கோயிலும், சிற்பங்களும் விஜயநகர மன்னர் கால கலை அமைப்பில் உள்ளதும், இக்கோயிலில் உள்ள தூண்களில் நின்ற நிலையிலான இரு துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது." இவ்வாறு அவர் கூறினார்.
டாபிக்ஸ்