Chennai Theft : பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த 495 டயர்கள் கொள்ளை! காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ்!
சென்னையில் இருந்து பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 495 டயர்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னரில் இருந்த 495 டயர்கள் திருடு போன சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். இதில், தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் டயர் உற்பத்தி செய்யும் பிரபல தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டயர்கள் கண்டெய்னர் பாக்ஸ் மூலம் பொன்னேரி அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பல்களில் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், டயர்களை ஏற்றுமதி செய்வதற்காக கண்டெய்னரில் ஏற்றப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் சீலிடப்பட்டு கண்டெய்னர் லாரி மூலம் கடந்த பிப்ரவரி மாதம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கப்பலில் ஏற்றப்பட்ட 1500 டயர்கள் அடங்கிய கண்டெய்னர் பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரேசில் நாட்டில் பரிசோதித்த போது அதில் டயர்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக டயர் தொழிற்சாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.