Registration: டாஸ்மாக்கிற்கு டஃப் தரும் பத்திரப்பதிவு துறை! ஒரே நாளில் 180 கோடி வருவாய் ஈட்டி அசத்தல்!
”சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான நாளை (20.10.2023) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்ப்பு”
நேற்று (18.10.2023) ஒருநாளில் மட்டும் 180 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டி உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் 18.10.2023 அன்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. அதன் விளைவாக நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.
சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான நாளை (20.10.2023) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்.
டாபிக்ஸ்