WTC Final 2023: 31வது சதம்! ஓவல் மைதானத்தில் ராஜநடை போடும் ஸ்மித் - BreakThrough கொடுத்த சிராஜ்
இன்னும் 100 டெஸ்ட் போட்டிகள் கூட விளையாடாத ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், 31வது சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில் தனது பார்மை அவர் தொடர்ந்து வருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இரண்டாவது நாள் இன்று தொடங்கிய நிலையில், ஆட்டத்தின் 3வது பந்திலேயே சதமடித்தார் ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 31வது சதமாக அமைந்தது. இந்திய அணிக்கு எதிராக ஸ்மித் அடிக்கும் 9வது சதமாகும்.
ஏற்கனவே இந்த போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு ராசியில்லாத மைதானம் என்று குறிப்பிட்டிருந்தபோதிலும், ஸ்டீவ் ஸ்மித்தை பொறுத்தவரை 3 போட்டிகளில் விளையாடி, ஒரு சதம் உள்பட 391 ரன்கள் எடுத்திருந்தார். அத்துடன் பேட்டிங் சராசரி 50க்கு மேலும், 100க்கு மேல் ஸ்டிரைக் ரேட்டும் வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே மிகவும் நிதானமாக விளையாடி வந்த ஸ்மித், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 227 பந்துகளை எதிர்கொண்டு 95 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து இன்றைய ஆட்டம் தொடங்கி மூன்றாவது பந்திலேயே அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து சதமடித்தார்.
இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் 2000 ரன்களை அடித்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் இந்த சாதனையை புரிந்துள்ளனர். இதுவரை இந்தியாவுக்கு எதிராக 36 இன்னிங்ஸ் விளையாடியிருக்கும் ஸ்மித் 2006 ரன்களை எடுத்து, சராசரியாக 69.2 வைத்துள்ளார்.
முதல் நாள் ஆட்டத்தில் அணியின் ஸ்கோர் 71 என இருந்தபோது களமிறங்கினார் ஸ்டீவ் ஸ்மித். இதன் பின்னர் 76 ரன்கள் இருந்தபோது சிறப்பாக பேட் செய்து வந்த லபுஸ்சேன் அவுட்டான நிலையில், அவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த ட்ராவிஸ் ஹெட்டுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இவர்கள் இருவரும் இணைந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதைத்தொடர்ந்து இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்திலும் இந்த இருவரும் இணைந்த தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
சிறப்பாக பேட் செய்து 150 ரன்களுக்கு மேல் குவித்த ஹெட், 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். இவர்களின் நீண்ட பார்ட்னர்ஷிப்பை உடைத்து இந்தியாவுக்கு திருப்புமுனை கொடுத்தார் முகமது சிராஜ்.
இதனால் அணியின் ஸ்கோர் 361 ரன்கள் எடுத்திருந்த நிலையில். ஆஸ்திரேலியாவின் 4வது விக்கெட் வீழ்ந்தது. தற்போது ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
டாபிக்ஸ்