WTC Final 2023: மூன்றாவது நாள் முடிவில் தலை தப்பிய இந்தியா! வலுவான நிலையில் ஆஸி.,
பலோ ஆன் ஆவதை தவிர்த்தபோதிலும் 173 ரன்கள் பின்னடைவு பெற்றிருப்பது இந்தியாவுக்கு பாதகமான விஷயமாகவே அமைந்துள்ளது. மூன்றாம் நாள் முடிவில் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா வலுவான நிலையிலேயே உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலர்களில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து பேட் செய்த இந்திய அணியின் டாப் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் போராட்டத்தால் பாலோ ஆன் ஆவதை தவிர்த்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி 173 ரன்கள் பின்னடைவு பெற்றது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியாவுக்கு, முதல் இன்னிங்ஸை போல் முகமது சிராஜ் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஆட்டத்தின் 3வது ஓவரில் பார்மில் இருக்கும் டேவிட் வார்னரை ஒரு ரன்னில் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார்.
இவரை தொடர்ந்து உஸ்மான் கவாஜாவை 13 ரன்னில் தூக்கினார் உமேஷ் யாதவ். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்தார்.
ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரையும் விரைவாக இழந்தபோதிலும், மனம் தளராத லபுஸ்சேன் - ஸ்டீவ் ஸ்மித் ஜோடி நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர்.
ஸ்மித் 34 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்பின்னரான ஜடேஜா பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த ட்ரேவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸை போல் இரண்டாவது இன்னிங்ஸிலும் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
ஆனால் இந்த முறை இந்திய பவுலர்கள் அவரை அதிக ரன்கள் எடுக்க விடாமல் விரைவாக அவுட்டாக்கினார். 18 ரன்கள் எடுத்த ஹெட், ஜடேஜா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் மிடில் ஆர்டர் பேட்டராக களமிறங்கிய க்ரீன், முதல் இன்னிங்ஸ் போல் சொதப்பாமல் பொறுமையாக பேட் செய்தார். இவருடன் களத்தில் இருந்த லபுஸ்சேனும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. லபுஸ்சேன் 41, க்ரீன் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய பவுலர்களில் ஜடேஜா 2, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.
முன்னதாக, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 151 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இன்று தொடர்ந்த இந்திய அணி கூடுதலாக 145 ரன்கள் எடுத்து, 296 ரன்களில் ஆல்அவுட்டானது.
இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக ரஹானே 89, ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா பவுலர்களில் கம்மின்ஸ் 3, ஸ்டார்க், க்ரீன், போலாந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்பின்னரான நாதன் லயன் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
டாபிக்ஸ்