WTC Final 2023: நான்காவது நாள் உணவு இடைவேளை வரை வலுவான நிலையில் ஆஸி.,! விடாது நெருக்கடி தரும் இந்திய பவுலர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முக்கியமான கட்டத்தில் இருந்து வரும் நிலையில் நான்காவது நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்டும், ஆஸ்திரேலியா அணி 78 ரன்களும் எடுத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரிலேயா 469 ரன்கள், இந்தியா 296 ரன்கள் எடுத்துள்ளது. 173 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் மூன்றாவது நாளில் உணவு இடைவேளைக்கு பிந்தைய செஷனில் சில ஓவர்களும், கடைசி செஷன் முழுவதையும் பேட் செய்தத ஆஸ்திரேலியா அணி.
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான வார்னர், கவாஜா, ஸ்மித், ஹெட் ஆகியோர் அவுட்டாகியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவரில் நிதானமாக பேட் செய்து வந்த லபுஸ்சேன் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ். அவர் 126 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்கள் அடித்திருந்தார்.
இவரை தொடர்ந்து இடது கை பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி பேட் செய்ய வந்தார். ஏற்கனவே களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் பொறுமையாக பேட் செய்து ரன்களை குவித்தார்.
க்ரீன் - கேரி இணைந்து 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது ஜடேஜா பந்தில் 25 ரன்கள் எடுத்திருந்த க்ரீன், கிளீன் போல்டாகி வெளியேறினார்.
பின்னர் பேட் செய்ய வந்த ஸ்டார்க் - கேரி ஆகியோர் கொஞ்சம் வேகமாக ரன்குவிப்பில் ஈடுபட தொடங்கினர். இதனால் அணியின் ஸ்கோரும் மெல்ல உயர்ந்தது.
நான்காவது நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 374 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையிலேயே உள்ளது.
இந்திய பவுலர்களில் ஜடேஜா 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
எதிர்வரும் இரண்டாவது செஷன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் எந்த அணி ஆதிக்கம் செலுத்துகிறதோ அந்த அணிக்கான வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்