WTC Final 2023: பவுலிங்கிலும் மிரட்டிய ஆஸி.,! டாப் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் - இக்கட்டான நிலையில் இந்திய அணி
முதல் நாள் ஆட்டத்தை போல் இரண்டாவது நாளிலும் ஆஸ்திரேலியா கையே ஓங்கியுள்ளது. இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாடாமல் ஏமாற்றிய நிலையில் 318 ரன்கள் பின்தங்கி இக்கட்டான நிலையில் உள்ளது. கடைசி நம்பிக்கையாக ரஹானே மட்டும் அவுட்டாகாமல் பேட் செய்து வருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தை போலவே இரண்டாவது நாளிலும், ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
முதல் நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா அணி, இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் 3வது பந்திலேயே 95 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்து வந்த ஸ்டீவ் ஸ்மித், அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்து சதமடித்தார்.
மற்றொரு பேட்ஸ்மேனான ஹெட் 150 ரன்களை கடந்தார். தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்ட அவர் 163 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து ஸ்மித்தும் 121 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி உணவு இடைவேளைக்கு பின்னர் சிறிது நேரம் கழித்து 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ரோஹித் ஷர்மா 15, கில் 13 ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் பின்னர் பேட் செய்ய வந்த புஜாரா - கோலி ஆகியோர் நிதானத்தை கடைப்பிடித்தனர். ஆனாலும் இவர்களால் நீண்ட நேரம் ஆஸ்திரேலியா பவுலிங்கை தாக்கு பிடிக்க இயலவில்லை.
ஆஸ்திரேலியா பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு இருவரும் அவுட்டாகினர். புஜாரா, கோலி என இருவரும் தலா 14 ரன்கள் எடுத்தனர். 71 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
அப்போது பேட் செய்த ரஹானே - ஜடேஜா ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டு ரன்குவிப்பில் ஈடுபட்டனர். ஜடேஜா கொஞ்சம் அதிரடி காட்டி ரன்களை சேர்த்தார். இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தொடர்ந்து சிறப்பாக பேட் செய்து வந்த ஜடேஜா, ஸ்பின்னரான லயன் பந்து வீச்சில் அவுட்டானார். 51 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த ஜடேஜா, 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.
ஜடேஜா - ரஹானே ஆகியோர் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர். ரஹானே பொறுமையாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
ஜடேஜாவுக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஸ்ரீகர் பரத் களமிறங்கினார். அவரும் ரஹானேவுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 29, பரத் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தற்போதைய நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 318 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணி பாலே ஆன் ஆவதை தவிர்க்க இன்னும் 118 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. கைவசம் 5 விக்கெட்டுகளே உள்ள நிலையில், இனி வரும் பேட்ஸ்மேன்கள் அனைவரும் டெயிலெண்டர்களாக இருப்பதால் அணிக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா பவுலர்களில் பந்து வீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். நாளை மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டையும் இழக்காமல், ரன் குவிப்பிலும் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
டாபிக்ஸ்