Suboth Bhati: 999 என்ற ஜெர்ஸி எண் ஏன்?-சுவாரசியமான பதிலை அளித்த சுபோத் பதி!
Dindigul Dragons: நேற்றைய ஆட்டத்தின் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதையும் இவரே தட்டிச் சென்றார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நேற்று 8வது லீக் ஆட்டம் திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக, முதலில் பவுலிங் செய்த திண்டுக்கல் அணியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்கள் வீசி 1 மெய்டன், 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார் சுபோத் பதி.
நேற்றைய ஆட்டத்தின் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதையும் இவரே தட்டிச் சென்றார். அதுமட்டுமல்ல, இந்த சீசனில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டிஎன்பிஎல் பவுலர் என்ற சாதனையை தன்வைத்துள்ளார் சுபோத். இதன்காரணமாக இவர் வசம் தற்போது பர்ப்பிள் கேப் உள்ளது.
இந்த சீசனில் 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் அவர் 7.1 ஓவர்கள் வீசி, 27 ரன்களை விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரது பெஸ்ட் 19/3. எக்கானமி 3.76.
யார் இந்த சுபோத் பதி?
சுபோத் பதி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ம் தேதி பிறந்தார்.
டெல்லி, புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2015-2016 அக்டோபர் 30ம் தேதி இவர் முதல் தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமானார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டான விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 2015-16 டிசம்பர் 10ம் தேதி அறிமுகமானார்.
கடந்த 2021ம் ஆண்டு கிளப் டி20 போட்டி ஒன்றில் 79 பந்துகளில் 205 விளாசி அசத்தினார். டி20 கிரிக்கெட்டில் அவர் விளாசிய 2வது இரட்டை சதம் இதுவாகும்.
தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட்டிலும் கலக்கி வருகிறார். பந்துவீச்சில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். திண்டுக்கல் அணியை அஸ்வின் வழி நடத்துவதால், பவுலரின் தேவையை உணர்ந்து இவரை நன்கு ஆட்டத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்.
999 என்ற ஜெர்ஸி எண் ஏன்?
இவரது ஜெர்ஸி எண் 999. யாருமே 3 இலக்கங்களில் ஜெர்ஸி எண்ணை பொதுவாக வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
இந்நிலையில், உங்கள் ஜெர்ஸி எண் ஏன் 999 என வைத்துள்ளீர்கள் என டிஎன்பிஎல் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சுபோத் பதி, "எனக்கு 9 நம்பர் வைக்க வேண்டும் என விரும்பினேன். அதை வேறொருவர் பெற்று விட்டார். அதனால், 999 என வைத்துவிட்டேன். அதுமட்டுமல்ல, எனது பிறந்த தேதி (29), பிறந்த மாதம் (செப்டம்பர்), பிறந்த ஆண்டு (1990) ஆகியவற்றில் 9 என்ற எண் இடம்பிடித்திருக்கிறது. அதிலிருந்து எடுத்து 999 என வைத்துக் கொண்டேன்" என்கிறார்.
பல திறமையாளர்களை அடையாளப்படுத்தி வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் சுபோத் பதி என திறமையாளர் உருவெடுத்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.
டாபிக்ஸ்