IND vs WI 3rd ODI Preview: கோப்பையை வெல்லப் போவது யார்?-இன்றைய ஆட்டத்தில் மேலும் ஒரு ஸ்பெஷல் இருக்கு..
Rohit Sharma: பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆடவர் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும். இதற்கு முன்பு மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் நடைபெற்றிருக்கிறது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இந்தத் தொடரின் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட், 5 டி20 ஆட்டங்களில் விளையாட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் யஷஸ்வி, இஷான் கிஷன் ஆகியோர் அறிமுகமாகினர். முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் டிரா ஆனது. அதைத் தொடர்ந்து நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவும், 2வது ஒரு நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும் ஜெயித்துள்ளன. இதனால் ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது.
முதல் ஒருநாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை பஞ்சராக்கிய இந்திய அணி, இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் சறுக்கியது.முந்தைய ஆட்டத்தில் இஷான் கிஷன் அரை சதம் பதிவு செய்தபோதிலும் எஞ்சிய வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியதால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் இந்திய அணி 181 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
ஆட்டம் 50 ஓவர்கள் வரை கூட செல்லவில்லை. 40.5 ஓவர்களில் முடிவுக்கு வந்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ், தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் வந்த கேப்டன் ஷாய் ஹோப் அந்த அணிக்கு 'ஹோப்' கொடுக்கும் வகையில் விளையாடி அரை சதம் பதிவு செய்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பார்படாஸில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் டாஸ் ஜெயித்த அணி வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டம் டிரினிடாட்டில் நடக்கிறது.
மைதானம் எப்படி?
பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆடவர் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும். இது இன்றைய ஆட்டத்தில் ஸ்பெஷல். இதற்கு முன்பு மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் நடைபெற்றிருக்கிறது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இதே மைதானத்தில் கடந்த ஆண்டு நடந்த டி20 போட்டியில் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
இந்த மைதானமும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும். எனவே, தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷாட்மேக்கிங் எளிதான காரியமாக இருக்காது என்பதால் பேட்ஸ்மேன்கள் கவனித்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ODI தொடர் கோப்பை யாருக்கு என்பதற்கான போட்டியாக இது இருக்கும் என்பதால் பரபரப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது.
வெஸ்ட் இண்டீஸ் உத்தேச பிளேயிங் லெவன்
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அத்தனாஸ், ஷாய் ஹோப் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், யான்னிக் கரியா, அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோதி, ஜேடன் சீல்ஸ்
இந்தியா உத்தேச பிளேயிங் லெவன்
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், சாஹல், முகேஷ் குமார்.
டாபிக்ஸ்