IND vs WI 2nd Day: அறிமுக ஆட்டத்தில் அரை சதம் விளாசிய யஷஸ்வி.. கேப்டன் ரோகித்தும் சாதனை!
Rohit Sharma: டெஸ்ட் கிரிக்கெட்டில் 15வது அரை சதத்தை பதிவு செய்தார் கேப்டன் ரோகித் சர்மா.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ரோசோ மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 150 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியிருக்கும் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் ரோகித் 30 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கியது. இருவரும் அரை சதம் பதிவு செய்தனர்.
யஷஸ்வி அறிமுகமான முதல் டெஸ்டிலேயே அரை சதம் பதிவு செய்தார். மறுபக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 15வது அரை சதத்தை பதிவு செய்தார் கேப்டன் ரோகித் சர்மா. அத்துடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,500 ரன்களை கடந்தார் சாதனை புரிந்தார்.
உணவு இடைவேளையின்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 146 ரன்களை எடுத்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்த வீரர் ஆவார். அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்.
முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தில், முதல் இரண்டு செஷன்கள் மட்டும் விளையாடியே வெஸ்ட் இண்டீஸ், இந்திய ஸ்பின் காம்போவான அஸ்வின் - ஜடேஜா சுழலில் சரிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அலிக் அத்தானாஸ் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.
இந்திய பவுலர்களில் அற்புதமாக பவுலிங் செய்து வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களை மிரட்டிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு அடுத்தபடியாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
டாபிக்ஸ்