IND vs WI 1st T20: மைல்கல் போட்டியில் களமிறங்கும் இந்தியா! விட்டதை பிடிக்க டாப் வீரர்களுடன் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi 1st T20: மைல்கல் போட்டியில் களமிறங்கும் இந்தியா! விட்டதை பிடிக்க டாப் வீரர்களுடன் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ்

IND vs WI 1st T20: மைல்கல் போட்டியில் களமிறங்கும் இந்தியா! விட்டதை பிடிக்க டாப் வீரர்களுடன் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 03, 2023 06:20 AM IST

மூன்று அறிமுக வீரர்கள் உள்பட ஐபிஎல் போட்டிகள் ஜொலித்த நட்சத்திர வீரர்கள் கொண்ட அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்குகிறது இந்தியா. ஏற்கனவே டெஸ்ட், ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நிலையில் டி20 தொடரையும் வென்றால் முழுமையான வெற்றியுடன் நாடு திரும்பலாம்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் டி20 போட்டி இன்று  தொடக்கம்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்

இதையடுத்து தற்போது இரு அ்ணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் பிரதான சுற்று போட்டிகளில் விளையாட தகுதி பெறாமல் போனது. அதன் பின்னர் இந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற தவறியது.

டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற அணி உலகக் கோப்பை விளையாடுவதற்கு தகுதி பெறாமல் இருக்கும் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ள வெஸ்ட் இண்டீஸ். இருப்பினும் டெஸ்ட், ஒரு நாள் அணியை போல் அல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி சற்று பலமாகவே உள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் எம்ஐ நியூயார்க் அணிக்கா விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் இடம்பிடித்திருக்கும் பூரான், பைனலில் அதிரடியாக பேட் செய்து சதமடித்து பார்மில் இருப்பது நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

அதேபோல் ஜேசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், அகேல் ஹொசின் போன்ற ஆல்ரவுண்டர்களின் காம்பினேஷன் அணிக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக உள்ளது. அத்துடன் ஷிமரான் ஹெட்மேய்ர், ரோவ்மன் பவுல், கெய்ல் மேயர்ஸ், அல்சாரி ஜோசப், ஷாய் ஹோப், பிரெண்டான் கிங் என டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் இந்திய அணிக்கு கடும் சவால் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியை பொறுத்தவரை பிரதான வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, முகமது ஷமி, முகமது சிராஜ் போன்றோர் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை ஜொலித்த வீரர்களை கொண்ட அணியாக உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி முதல் போட்டியிலேயே 171 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், டி20 போட்டியில் களமிறங்கவுள்ளார். இவரை போல் அதிரடியில் கலக்கும் திலக் வர்மா, வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்குகிறார்கள்.

அதேபோல் விக்கெட் கீப்பிங்கில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் என இரண்டு வீரர்கள் உள்ளார்கள். ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தவுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை இந்த மாதம் தொடங் இருக்கும் கரீபியன் பிரீமியர் லீக் தொடருக்கு முன்னதாக நடைபெறும் நீண்ட டி20 தொடராக உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் முதல் டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. அத்துடன் இது இந்திய அணிக்கு 200வது டி20 போட்டி என்ற சிறப்பும் உள்ளது. இந்தியாவை விட பாகிஸ்தான் அணி தான் அதிகபட்சமாக 223 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. 

எனவே டெஸ்ட், ஒரு நாள் தொடரில் பெற்ற வெற்றியை இதிலும் தொடரும் முனைப்பில் இந்தியா களமிறங்கும். அதேபோல் முதல் இரண்டு தொடர்களில் விட்டதை இதில் பிடித்து கொள்ளும் முயற்சியில் வெஸ்ட் அணி ஈடுபடும் என எதிர்பார்க்கலாம்.

போட்டி நடைபெறும் தாரூபா பிரெய்ன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை ஒரேயொரு டி20 போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் பவுலர்கள் சரியாக செயல்பட்டால் சாதிக்கலாம். போட்டி நடைபெறும் இன்றைய நாளில் 40 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே மழை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.